எரிபொருளுக்கு பணம் இல்லை, ஓட்டுநருக்கு ஊதியம் கொடுக்க நிதி இல்லை- காட்சி பொருளான சிறப்பு பள்ளி பஸ்
கடந்த மூன்று மாதங்களாக ஓட்டுனருக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை என்பதாலும், பஸ்க்கு எரிபொருள் நிரப்ப பணம் இல்லை என்பதாலும் அந்த பஸ் இயக்கப்படாமல் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு சார்பில் வித்யா பிரகாசம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி மற்றும் ஆரம்ப நிலை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சிறப்பு பள்ளியில் 52 மாணவ மாணவிகளும், ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் 30 பேரும் என மொத்தம் 82 பேர் படிக்கின்றனர். இங்கு பயிலும் குழந்தைகளை வீட்டிலிருந்து பள்ளிக்கும், மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கும் அழைத்துச் செல்வதற்கு வசதியாக வாகனம் இயக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கோவில்பட்டி தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு வாகனம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த பஸ் செயல்பாட்டிற்கு வந்தது. இதனால் இங்கு கல்வி பயின்று வரும் குழந்தைகள் பயன்பெற்று வந்தனர். பஸ் ஓட்டுநருக்கு ஊதியம் மற்றும் பஸ்கான டீசல் செலவு தொகை மாவட்ட நிர்வாகம் மூலமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது.
அப்போதைய தூத்துக்குடிமாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் முன்னிலையில் கனிமொழி எம்பி, அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆகியோா் மனநலம் குன்றிய பள்ளி மாணவா்களுக்கான பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தனா். கடந்த ஓராண்டாக சிறப்பாக பேருந்து இயங்கி வந்த நிலையில் தற்போது ஓட்டுனருக்கு ஊதியம், எரிபொருள் போட பணம் இல்லை என்ற காரணத்தினால் பேருந்து இயக்கப்படவில்லை. மாவட்ட நிா்வாகம் மூலம் பேருந்து ஓட்டுனருக்கு ஊதியம், பேருந்துக்கு எரிபொருள் செலவு மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்து ஓட்டுனருக்கும் கடந்த இரு மாதங்களாக ஊதியம் நிலுவையில் இருப்பதாகவும், எரிபொருள் செலவிற்கான பணம் கிடைக்கப் பெறாததால் பேருந்து நிறுத்தப்பட்டதாகவும் பெற்றோா்கள் கூறி வருகின்றனா். இம்மாதம் சிறப்புப் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பேருந்து இயங்காததால் பெற்றோா்கள் மிகுந்த சிரமப்பட்டு வருவதோடு மட்டுமின்றி ஆட்டோக்களுக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களாக பஸ் இயக்கப்படவில்லை என்பதால் குழந்தைகள் சிரமப்பட்டு வருகின்றனர். பெற்றோர்கள் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் நிரந்தரமாக நிதி ஒதுக்கி உதவி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.