மாவட்ட தலைவர் பதவிக்கு விருப்ப மனு கொடுக்கலாம்... காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தகவல்
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற 27-ந்தேதி சமர்ப்பிக்க வேண்டும். அன்று மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது, புதிய தலைவர்கள் தேர்வு, நியமிப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவருக்கு விருப்பமனு வழங்கலாம் என்று மேலிட பொறுப்பாளர் நரேஷ்குமார் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருக்கு போட்டியிட விருப்பமனுவை கட்சியினர் வழங்கலாம் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தஞ்சாவூர் மாவட்ட மேலிட பொறுப்பாளர் நரேஷ்குமார் தெரிவித்தார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் நேற்று தஞ்சாவூரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வரதராஜன் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தஞ்சாவூர் மாவட்ட மேலிட பொறுப்பாளர் நரேஷ்குமார் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்தியா முழுவதும் மாவட்ட தலைவர்களுக்கான தேர்தல், நியமனம் ஆகியவை நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் பல மாவட்டங்களில் மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதாலும், புதிய தலைவர்களை தேர்வு செய்ய வேண்டியும் உள்ளது. இதற்காக விருப்பமனு வாங்கப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள தலைவர்கள் மீண்டும் போட்டியிடவும், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பது குறித்து கட்சியின் நிர்வாகிகளிடம் நேருக்கு நேர் முறையில் கள ஆய்வு செய்து, விசாரித்து இதன் அறிக்கையை டிச.5-ம் தேதிக்குள் கட்சியின் தலைமைக்கு அனுப்ப வேண்டியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின்போது கட்சி சார்பில் போட்டியிடுபவர்களை மாவட்டத் தலைவர் பரிந்துரை செய்ய வேண்டும் என்பதால், கட்சியில் மாவட்டத் தலைவருக்கு அதிக அதிகாரம் இருப்பதால், முதலில் மாவட்டத் தலைவர்களுக்கான பதவியை மறுசீரமைப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மாநகரம் ஆகிய பகுதிகளில் உள்ள மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு மனு வழங்கப்பட்டு வருகிறது.
இதனை பூர்த்தி செய்து வழங்கினால் 6 பேர் கொண்ட கமிட்டியினர் மனுவினை ஆய்வு செய்து, தலைமையின் உத்தரவுப்படி செயல்படுத்தப்படும், விரைவில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் வலுவான கட்டமைப்பை ஏற்படுத்த இந்த நடவடிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளதால், அதற்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்துக்குட்பட்ட தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டப்பேரவை தொகுதிளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இன்று தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பார்வையாளர்கள் மோகன்ராஜ், மாவட்ட துணைத்தலைவர் லட்சுமிநாராயணன், மாநில வக்கீல் பிரிவு துணை ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தஞ்சை மாவட்ட மேலிட பொறுப்பாளர் நரேஷ்குமார் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கட்சி தொழிலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், முன்னாள் அலுவலக பொறுப்பாளர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டு சிறந்த தலைவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டுள்ளோம்.
மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற 27-ந்தேதி சமர்ப்பிக்க வேண்டும். அன்று மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது, புதிய தலைவர்கள் தேர்வு, நியமிப்பது குறித்து கட்சியின் நிர்வாகிகளிடம் நேருக்கு நேர் கள ஆய்வு செய்ய உள்ளோம். முதலில் மாவட்ட தலைவர்களுக்கான பதவி மறுசீரமைப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
மாவட்ட தலைவர்கள் தேர்வுக்குப்பின்னர் அடுத்த கட்டமாக தொகுதி, மண்டலம் மற்றும் கிராம காங்கிரஸ் குழுக்களை மீண்டும் உயிர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கட்சியின் குரல் ஒவ்வொரு மூலையிலும் இருப்பதை உறுதி செய்வோம். காங்கிரஸ் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் தலைவர்களை அடையாளம் காண தொண்டர்கள், ஜனநாயகத்தின் நல விரும்பிகள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி முகமதுயூனுஸ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வடிவேல், செந்தில் சிவக்குமார், சந்திரசேகரன், செல்வம், மகேந்திரன், சாந்தாராமதாஸ், ஞானசீலன், குணசேகரன் மற்றும் மாநகர நிர்வாகிகள், வார்டு தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





















