நாளை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்: மாற்றுத்திறனாளிகள் தீர்மானம் எதற்காக?
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பேட்டரி கார், பேட்டரி சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்த வேண்டும்.

தஞ்சாவூர்: ஆந்திர மாநிலத்தைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மையைப் பொறுத்து உதவித்தொகை என வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாளை 11ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடக்கும் முற்றுகை போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என்று மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்ட ஐந்தாவது மாநாடு பட்டுக்கோட்டை எம்.என்.வி திருமண மண்டபம், க.பார்த்திபன், ஆர்.ஜனார்த்தனன், ஆர்.காளிமுத்து நினைவரங்கில் நவ.8,9 (சனி, ஞாயிறு) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்வாக பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் இருந்து 500 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பேரணியை, மாவட்ட துணைத் தலைவர் பழ.அன்புமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரிய தெரு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரிய கடைத்தெரு வழியாக பேரணி சென்றது. மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளிகள், தங்கள் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பியவாறு, சங்கக் கொடி ஏந்தியபடி சென்றனர்.
தொடர்ந்து பஜார் பள்ளிக்கூடம் அருகில் தே.லெட்சுமணன் நினைவு மேடையில், மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் என்.குமார் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் பி.ஜான்சி ராணி, மாநில துணைத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் கே.மோகன், மாவட்ட துணைத் தலைவர் ஏ.மேனகா, மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.ராஜன், சி.ஏ.சந்திர பிரகாஷ், கோவி.ராதிகா, ஏ.சாமியப்பன், ஜி.சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் எஸ்.மணிகண்டன் நன்றி கூறினார். இரண்டாம் நாளான நேற்று காலை மாவட்ட தலைவர் டி.கஸ்தூரி தலைமையில் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. ஒன்றியத் தலைவர் எஸ்.மணிகண்டன் கொடியேற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் கோவி. ராதிகா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் எம்.குமார் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பி.எம்.இளங்கோவன் வேலை அறிக்கையும், மாவட்டப் பொருளாளர் கே.மோகன் வரவு செலவு அறிக்கையும் முன்மொழிந்து பேசினர்.
தமுஎகச மாவட்டச் செயலாளர் ப.சத்தியநாதன், ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கோட்டச் செயலாளர் ஆர்.விஜயகுமார், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விவாதம் தொகுப்புரைக்குப் பிறகு புதிய மாவட்டக் குழு மற்றும் மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்களை முன்மொழிந்தும், வழிமொழிந்தும், சங்க நிர்வாகிகள் பேசினர். புதிய நிர்வாகிகளாக மாவட்டச் செயலாளராக பி.எம்.இளங்கோவன், தலைவராக டி.கஸ்தூரி, பொருளாளராக சி.ஏ.சந்திர பிரகாஷ் உள்ளிட்ட 33 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.
புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து மாநில பொதுச் செயலாளர் பி.ஜான்சி ராணி நிறைவுரையாற்றினார். புதிய மாவட்ட செயலாளர் நன்றி கூறினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பேட்டரி கார், பேட்டரி சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்த வேண்டும். சிவகங்கை பூங்கா உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும். சுவாமிமலை கோயிலில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர பழனியைப்போல ரோப்கார் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில், உயர் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் சென்று வர சாய்வுதள வசதி, சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்த வேண்டும். சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகங்களை தரைத்தளத்தில் அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் செயல்படும் பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆந்திர மாநிலத்தைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மையைப் பொறுத்து ரூ.6,000, 10,000, 15,000 என வழங்க வேண்டும் என வலியுறுத்தி நவ.11 அன்று தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, மாவட்டச் செயலர் பி.எம். இளங்கோவன் தலைமையில் நடைபெறும் மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





















