சசிகலா - வைத்திலிங்கம் நேருக்கு நேர் சந்திப்பு...பரபரப்பான அரசியல் களம்
இனிப்பு கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன வைத்திலிங்கம்
![சசிகலா - வைத்திலிங்கம் நேருக்கு நேர் சந்திப்பு...பரபரப்பான அரசியல் களம் Vaithilingam met Sasikala in Person and gave sweets to her in Thanjavur சசிகலா - வைத்திலிங்கம் நேருக்கு நேர் சந்திப்பு...பரபரப்பான அரசியல் களம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/09/5e0dc37d5a7c84a26f76d3700690d6401662715570792102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சசிகலா மற்றும் வைத்தியலிங்கம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்து கொண்டனர். இதில் வைத்தியலிங்கம் பிறந்தநாளுக்கு சசிகலா வாழ்த்துக்கள் தெரிவித்து இனிப்பு வழங்கியதால் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்து கரகோஷம் எழுப்பினர்.
புரட்சித் தலைவர் என்று தொண்டர்களால் போற்றப்பட்ட மறைந்த முதல்வர் எம்.ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் இப்போது சிதறிப் போய் கிடக்கிறது. கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே எதிர் திசையில் மல்லுக்கட்டிக் கொள்கின்றனர். ஒற்றை தலைமை என்ற அஸ்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பலத்தை காட்டி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை தேர்வு செய்ய செய்தார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பில் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி தற்போது ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளார். இந்த சூழ்நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகிறார் ஓபிஎஸ். இதே கருத்தைதான் சசிகலாவும் வலியுறுத்தி வருகிறார். அதிமுக பொதுக்குழு பிரச்சினைகளின் போதும் ஓ.பி.எஸ்க்கு உறுதுணையாக நின்றது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்திலிங்கம்தான். ஓ.பி.எஸ். ஆதரவாளரான அவர் ஓ.பி.எஸ்.க்கு பக்கபலமாக நிற்கிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பான ஆலோசனையிலும் வைத்திலிங்கத்தின் பங்கு அதிகம்.
இந்நிலையில் வைத்திலிங்கத்திற்கு இன்று பிறந்தநாள். அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் தஞ்சை பகுதியில் பிறந்த நாள் கொண்டாடத்தை நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் நடந்த இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் வைத்தியலிங்கம் கலந்துகொண்டு தனது ஆதரவாளர்களுடன் பிறந்த நாளை கொண்டாடி விட்டு ஒரத்தநாட்டில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது புரட்சிப்பயணம் மேற்கொண்டிருந்த சசிகலா மன்னார்குடியில் இருந்து ஒரத்தநாடு நோக்கி வந்து கொண்டிருந்தார். எதிரில் வைத்திலிங்கம் கார் வருவதை பார்த்து சசிகலா தனது காரை நிறுத்தி இறங்கினார். உடனே வைத்திலிங்கமும் தனது காரிலிருந்து இறங்கி வந்தார்.
இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நேருக்கு நேர் சந்தித்து கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சசிகலா வைத்தியலிங்கத்தை பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் இனிப்புகளும் வழங்கினார். இதை பார்த்த தொண்டர்கள் உற்சாகக்குரல் எழுப்பினர். கரகோஷங்களும் எழுந்தது. அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வாய்ஸ் கொடுத்த நிலையில் சசிகலா தன்னை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி இனிப்பும் கொடுத்ததால் வைத்திலிங்கம் ஏக உற்சாகத்தில் உள்ளார்.
சசிகலா தஞ்சாவூருக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கோயில் விழாக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின் போது வைத்திலிங்கத்தை யதார்த்தமாக சந்தித்தாரா? அல்லது இது பேசி வைத்துக் கொண்டு நடந்த சந்திப்பா. அதிமுகவில் சசிகலாவை கொண்டு வர இந்த சந்திப்பு நடந்துள்ளதா என்று பல கேள்விகளை எழுப்புகின்றனர் அரசியல் விமர்சகர்கள். எது எப்படி இருந்தாலும் முட்டிக் கொண்டவர்கள் இன்று இனிப்பு கொடுத்து சமரசம் ஆகி உள்ளனர். அதனால் விரைவில் மீண்டும் அதிமுகவில் சசிகலா என்ற செய்தி வரும் என்று அடிமட்ட தொண்டர்கள் பேசிக் கொண்டனர். எது நடந்தாலும் அது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும். அதுபோல்தான் இந்த சந்திப்பும் தஞ்சை அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது. ஏற்கனவே தஞ்சையை மழை குளுமைப்படுத்திக் கொண்டு இருக்கும் நிலையில் சசிகலா- வைத்திலிங்கம் சந்திப்பு தொண்டர்களை இன்னும் குளிர்ச்சியாக்கி உள்ளது. எதிரணி ஆட்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)