தஞ்சையில் இன்றும் விட்டு விட்டு பெய்த சாரல் மழை… அறுவடைப்பணிகள் பாதிப்பு
பலத்த மழையும், லேசான தூறலுமாக மழை பெய்து வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சை நேற்று மழை பெய்த நிலையில் இன்றும் பல பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்று காலை 6 மணி முதல் தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது வேகமாகவும் மழை கொட்டி தீர்த்தது. மதியம் 3 மணி வரையிலும் இந்த மழை நீடித்தது. இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையும், லேசான தூறலுமாக மழை பெய்து வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை முதல் சாரல் மழை அவ்வப்போது பெய்தது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். காலம் தாழ்த்தியும், கடந்த பருவமழையால் நாற்றுக்கள் பாதித்து மீண்டும் நாற்று நட்டு நடவு செய்த விவசாயிகளுக்கு இந்த மழை பயன் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன
தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் இடையூறாகச் சுற்றித் திரியும் கால்நடைகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பிடித்து காப்பகத்துக்குக் கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, மாநகரிலுள்ள சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடிக்கும் பணி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க. சரவணகுமார், மாநகர் நல அலுவலர் வீ.சி. சுபாஷ் காந்தி ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இதில், தஞ்சாவூர் தெற்கு வீதியிலும், பழைய பேருந்து நிலையத்திலும் சுற்றித் திரிந்த மாடுகளைப் பணியாளர்கள் பிடித்தனர்.
காப்பகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து மாநகர் நல அலுவலர் தெரிவித்தது:
இந்த மாடுகள் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் தங்களுடைய கால்நடைகளைச் சாலைகளில் விடாமல் வீட்டில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறினால் மாநகராட்சியால் விதிக்கப்படும் அபராத தொகை மற்றும் கால்நடைகளை பேணி காப்பதற்காக ஏற்படும் செலவை கால்நடை உரிமையாளர்களிடம் இருந்து பெறப்படும்.
இதில், அபராத தொகையாக முதல் முறை பிடிபடும் மாடு ஒன்றுக்கு ரூ. 3,000}ம், கன்றுக்கு ரூ. 1,500}ம், வசூலிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே மாடு பிடிக்கப்படும் நிலையில், மாடு ஒன்றுக்கு ரூ. 4,000}ம், கன்றுக்கு ரூ. 2,000}ம், மூன்றாவது முறை அதே மாடு பிடிபட்டால் மாடு ஒன்றுக்கு ரூ. 5,000}ம், கன்றுக்கு ரூ. 2,500}ம் அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிடிபட்டு காப்பகத்தில் அடைக்கப்படும் கால்நடைகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே மாடு தொடர்ந்து பிடிபட்டால் மாநகராட்சி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலத்தில் விடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















