டிஜிட்டல் அரெஸ்ட் என்று மிரட்டல்... முதியவரிடம் இருந்து ரூ.93 லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள்
வாட்ஸ் அப் காலில் பேசியவர்கள் இதுபோன்ற குற்றச்சம்பவங்களால் உங்களை நாங்கள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து விடுவோம். நீங்கள் குற்றமற்றவர் என்றால் நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்துங்கள்.

தஞ்சாவூர்: உங்கள் வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக 3 கோடி ரூபாய் மதிப்பிற்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என்று மிரட்டி முதியவரிடம் இருந்து ரூ. 93 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முருகப்பன் (70). இவர் பாபநாசம் பகுதியில் நகை அடகுகடை மற்றும் சிட் பண்ட்ஸ் நடத்தி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த செப்டம்பர் மாதம் வாட்ஸ் அப் காலில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதில் பேசியவர்கள் தங்களை போலீசார் என்று கூறிக் கொண்டு உங்கள் வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக ரூ.3 கோடி வரை பண பரிமாற்றம் நடந்துள்ளது. மேலும் உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட போலி சிம் கார்டுகள் வாயிலாக பாலியல் குற்றங்கள் மற்றும் ஆட்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக மிரட்டியுள்ளனர். இதனால் முருகப்பன் அச்சமடைந்துள்ளார்.
மேலும் அந்த வாட்ஸ் அப் காலில் பேசியவர்கள் இதுபோன்ற குற்றச்சம்பவங்களால் உங்களை நாங்கள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து விடுவோம். நீங்கள் குற்றமற்றவர் என்றால் நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்துங்கள். சரியானதாக இருந்தால் அந்த பணம் உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் பயந்து போன முருகப்பன் 4 தவணைகளில் ரூ.93 லட்சம் வரை அந்த மர்மநபர்கள் கூறிய வங்கிக்கணக்கில் செலுத்தி உள்ளார். முருகப்பனை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக இரண்டாம் முறையாக பணம் அனுப்பிய போது ரூ.30 ஆயிரத்தை மட்டும் திருப்பி அனுப்பி உள்ளனர்.
பின்னர் முருகப்பன் தன்னுடைய செல்போனுக்கு வந்த நம்பருக்கு பல தொடர்பு கொள்ள முயன்றபோது சுவிட்ஸ் ஆப் என்று வந்துள்ளது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை முருகப்பன் உணர்ந்துள்ளார். உடன் இதுகுறித்து அவர் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளாவில் உள்ள 3 வங்கி கணக்குகளை கொடுத்து மர்மநபர்கள் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடன் அந்த வங்கிக்கணக்கில் இருந்த ரூ.2.94 லட்சத்தை தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசார் முடக்கினர். மேலும் அந்த மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விரைவில் அந்த மர்மநபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர். டிஜிட்டல் அரெஸ்ட், ஆன்லைன் வேலை என்று வரும் மிரட்டல் போன்காலிற்கு பதில் அளிக்கக்கூடாது.
மேலும் உடன் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும். தற்போது டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் அதிகளவில் மோசடி நடக்கிறது. பரிசு பார்சல் வந்துள்ளது. அதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளது என்று வீடியோ காலில் போலீஸ் அலுவலத்தில் இருந்து பேசுவது போல் பேசுவார்கள். இதுவும் சைபர் க்ரைம் நபர்களின் மோசடி வேலைதான். எனவே இதுகுறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்





















