இந்த அணையை சுற்றுலா தலமாக அறிவித்தால், வருமானம் அரசுக்கு கிடைக்கும் - பொதுமக்கள் வேண்டுகோள்
இந்த அணையை சுற்றுலா தலமாக அறிவித்தால், வருமானம் அரசுக்கு கிடைக்கும் என்பதோடு, இந்தப் பகுதி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது அடித்தளமாக அமையும்.
காவிரி பாசனத்தின் கடைமடைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்ற சிறிய அணை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள மூனாற்றுத் தலைப்பு ஆகும். திருவாரூர், நாகை மாவட்டத்தை நோக்கி பாய்கின்ற வெண்ணாறானது, நீடாமங்கலம் அருகே வெண்ணாறு, கோரையாறு, பாமணி ஆறு என 3 ஆகப் பிரிகின்றது. இந்த ஆறுகள்தான் திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு கீழ் 9 பெரிய ஆறுகளாகவும், 50க்கும் மேற்பட்ட சிறிய ஆறுகளாகவும் பிரிந்து, காவிரி டெல்டாவின் கடைமடையில் உள்ள சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு பாசனத்துக்கு தண்ணீர் கொண்டு சேர்க்கின்றது. எனவே இந்த மூனாற்றுத் தலைப்பு காவிரி கடைமடைக்கு முக்கியத்துவம் வாய்ந்த அணை ஆகும். இந்த அணை, 1874ம் ஆண்டு கட்டப்பட்டது. இன்றும் அதன் உறுதித் தன்மை குறையாமல் உள்ளது. இந்த அணைதான் வெள்ள காலங்களில் தண்ணீரை தேவையான ஆறுகளின் வாயிலாக திருப்பி பெரும் வெள்ளச் சேதங்களை திருவாரூர், நாகை மாவட்டங்களில் தவிர்க்க இன்றளவும் உதவி செய்வதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இந்த அணையின் அழகிய கட்டமைப்பு மற்றும் இயற்கையான சூழல் இவற்றை பார்த்து ரசிக்க, மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளிலிருந்து மட்டுமே மக்கள் வந்து செல்கின்றனர். இதற்கு காரணம் இப்படி ஒரு சிறிய அணை இருப்பதை பொதுப்பணித்துறை தற்போது நீர்வள ஆதாரத்துறை நீண்ட நாட்களாக வெளிப்படுத்த முயற்சிக்காமல் உள்ளது. குறிப்பாக இந்த மூனாற்றுத் தலைப்பு தஞ்சை மற்றும் நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால், தஞ்சையிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் ஏராளமான சுற்றலா பயணிகள், வேளாங்கண்ணி, நாகூர் பகுதிக்கு சென்று வருகின்ற கேரளா பகுதி பக்தர்கள் இளைப்பாறுவதற்கு தகுந்த இடம். இதனை பயன்படுத்தி இந்த அணையை சுற்றுலா தலமாக அறிவித்தால், வருமானம் அரசுக்கு கிடைக்கும் என்பதோடு, இந்தப் பகுதி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது அடித்தளமாக அமையும்.
இதுபற்றி மூனாற்றுத் தலைப்புக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்திருந்த பொதுமக்கள் கூறும்பொழுது, நாங்கள் மன்னார்குடி பகுதியிலிருந்து வருகின்றோம். ஆற்றில் தண்ணீர் வருகின்ற காலகட்டங்களில் இந்த அணைக்கு வந்து ஓய்வு எடுப்பதையும், ஆற்றில் குளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளோம். திருவாரூர் மாவட்டத்தில் கேளிக்கை சுற்றுலா என்பதே இல்லை. பார்த்து ரசிக்க 2 பறவைகள் சரணாலயங்கள் மட்டுமே உள்ளன. அவற்றுக்கும் இந்த அணையிலிருந்துதான் தண்ணீர் சென்றாக வேண்டும். இந்த சூழலில் மூனாற்றுத் தலைப்பை சுற்றுலா தலமாக அறிவித்து, ஆறுகளில் மக்கள் குளிப்பதற்கு தடுப்பு கம்பிகள் அமைத்தல், படகு சவாரி விடுதல், குழந்தைகள் விளையாடுவதற்கு பார்க் வசதியை ஏற்படுத்தினால் பொதுமக்களுக்கு நல்ல சுற்றுலா தலம் கிடைக்கும். இப்பகுதியில் படிக்கும் பள்ளி குழந்தைகளை சுற்றுலா அழைத்து வந்து இந்த 3 ஆறுகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்க முடியும் என்றனர். இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, மூனாறுத்தலைப்பு அணையை சுற்றுலாதலமாக அறிவிக்க ஏற்கனவே 7 முறை திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சுற்றுலா தலமாக அறிவித்தால், அணைக்கு அருகில் பெரிய பாலம் கட்ட வேண்டும், தற்போதைய நிலையில் போக்குவரத்துக்கு சாலை வசதி மிகவும் குறுகலாக உள்ளது. இதுபோன்ற இடர்பாடுகளை களைய அரசு, சுற்றுலாத்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்தால் மட்டுமே சாத்தியமாகும். இதனை சுற்றுலா தலமாக அறிவித்தால் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மூனாற்றுத் தலைப்பை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்