மனித நேயம் இன்னும் மரித்துப் போகவில்லை... ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய் குட்டியை மீட்ட பாச மனிதர்..!
மனித நேயம் இன்னும் மறித்துப் போகாமல் இருக்கிறது என்பதற்கு வாழும் ஆதாரமாக மூர்த்தி உள்ளதாக நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய் குட்டியை 5 மணி நேரம் போராடி உயிருடன் மீட்கப்பட்டது. இடத்தின் உரிமையாளருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டம் குன்னியூர் தெற்குத் தெருவை சேர்ந்த 45 வயதான மூர்த்தி என்பவர் மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் எம்சாண்ட் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள இடத்தில் குடிநீருக்காக 30 அடி ஆழ்குழாய் கிணறு தோண்டியுள்ளார். தண்ணீர் கிடைக்காததால் அதனை அப்படியே கைவிட்டு உள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டு கொல்லைப்புறத்தில் நாட்டு நாய் ஒன்று பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாரதவிதமாக அந்த நாய்க்குட்டி 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது. இந்த கிணறு தோண்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆனதால் 15 அடி தூர்ந்து 15 அடி மட்டுமே ஆழம் இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த கிணற்றில் இருந்து முனகல் சத்தம் வந்ததை அடுத்து மூர்த்தி டார்ச் லைட்டை எடுத்து சென்று பள்ளத்திற்குள் பார்த்துள்ளார். அப்போது 15 அடி ஆழத்தில் நாய்க்குட்டி ஒன்று இருப்பதை கண்ட அவர் அருகில் உள்வர்களை அழைத்து கயிற்றில் சுருக்குப் போட்டு நாய் குட்டியை மீட்க முயற்சி செய்துள்ளார். இந்த முயற்சி பலனளிக்காமல் போகவே மூர்த்தி உடனடியாக சென்னை பேரிடர் மேலாண்மை குழுவிற்கு போன் செய்துள்ளார். அவர்கள் திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவாரூர் தீயணைப்பு துறையினர் சுறுக்கு போட்டு கயிறு மூலம் நாய் குட்டியை மீட்க முயற்சி செய்துள்ளனர். இந்த முயற்சி பலன் அளிக்காத காரணத்தினால் பொறுமையிழந்த மூர்த்தி நாய்க்குட்டியை எப்படியும் காப்பாற்றி விடவேண்டும் என்கிற அடிப்படையில் ஜே.சி.பி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் 15 அடிக்கு குழி தோண்டி அதன் மூலம் தீயணைப்பு வீரர்கள் அதில் இறங்கி பத்திரமாக அந்த நாய்க்குட்டியை மீட்டுள்ளனர். இதற்காக மூர்த்தி 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது. காலை 8.30 மணிக்கு ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த இந்த நாய்க்குட்டியை 5 மணி நேரம் போராடி மதியம் 1.30 மணிக்கு மீட்டு உள்ளனர். நாய்க்குட்டியை வெளியில் எடுத்தவுடன் அதை மகிழ்ச்சி பொங்க மூர்த்தி தூக்கி கொஞ்சிய புகைப்படம் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு நாய்க்குட்டிக்காக தனது சொந்த பணத்தை செலவு செய்து அதனை உயிருடன் மீட்டதுடன் அந்த ஆள்குழாய் கிணற்றையும் முழுவதுமாக மூர்த்தி மூடி உள்ளார். மனித நேயம் இன்னும் மரித்துப் போகாமல் இருக்கிறது என்பதற்கு வாழும் ஆதாரமாக மூர்த்தி உள்ளதாக நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்