Thiruvarur Central University: அதிகபட்சக் கட்டணமே ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம்தான்... மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்கத் தயாரா?
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் என்னென்ன படிப்புகள் உள்ளன?, எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? அங்கு என்ன வசதிகள் வழங்கப்படுகின்றன? பார்க்கலாம்.
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் என்னென்ன படிப்புகள் உள்ளன?, எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? அங்கு என்ன வசதிகள் வழங்கப்படுகின்றன? பார்க்கலாம்.
நாடு முழுவதும் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் சார்பாக 51 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. கோவா தவிர்த்து பிற மாநிலங்கள் அனைத்திலும் இந்த மத்தியப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிகபட்சமாக டெல்லியில் 7 மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகிய 2 மத்தியப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 12 இளங்கலைப் படிப்புகளும், பி.எஸ்சி., பிஎட் உட்பட 7 ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளும், எம்எஸ்சி கணிதம், எம்எஸ்சி வேதியியல், எம்எஸ்சி இயற்பியல், எம்ஏ பொருளாதாரம் உட்பட 23 முதுகலை பட்டப் படிப்புகளும், 28 பிஎச்டி படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
குறைவான கட்டணம்
இந்த மத்தியப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்புகளுக்கு ஓராண்டுக்கு அதிகபட்சமாக ரூ.16 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பிற படிப்புகளுக்கு, படிப்புகளின் தன்மையைப் பொறுத்து, குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 63 முதல், அதிகபட்சமாக ரூ. 18 ஆயிரம் வரை ஆண்டுக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் தனித்தனி விடுதி வசதியும் உள்ளது.
படிப்புகள் குறித்த ஆண்டுவாரியான கட்டண விவரங்கள் குறித்து https://cutn.ac.in/wp-content/uploads/2021/11/Fee_Structure_2021-22_03112021.pdf என்ற இணைய முகவரியில் முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.
முன்னதாக, இளங்கலை படிப்புக்காக மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை மத்திய பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியான https://cuet.samarth.ac.in/ மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். தற்போது முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s3d1a21da7bca4abff8b0b61b87597de73/uploads/2022/05/2022051983.pdf
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு சென்னை, கோயம்புத்தூர், கடலூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கை விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன வசதிகள்?
பல்கலைக்கழகத்தில் நூலகம், மருத்துவ வசதி, பன்னோக்கு கருத்தரங்கம், விருந்தினர் மாளிகை, விளையாட்டு அரங்கம், என்சிசி, என்எஸ்எஸ், உளவியல் ஆலோசனை மையம் ஆகிய பல வசதிகள் உள்ளன.
குறைந்த அளவில் தமிழக மாணவர்கள் சேர்க்கை
நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும். முன்னதாகத் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களின் சேர்க்கை குறித்து அண்மையில் பேசிய துணைவேந்தர் கிருஷ்ணன், ''திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 30 சதவீதத் தமிழ் மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். குறைந்த அளவு தமிழக மாணவர்களே நுழைவுத்தேர்வு எழுதுவதால்தான், தமிழக மாணவர்களின் சேர்க்கையும் குறைவாக உள்ளது'' என்று கூறியிருந்தார்.
இதனால் குறைந்த கட்டணம், தனித்தனி விடுதி வசதி, திறமையான பேராசிரியர்களைக் கொண்ட திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தைத் தமிழக மாணவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் பல்கலைக்கழகம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு: 04366 - 277337
இ-மெயில் முகவரி: cucet@nta.ac.in
*
மேலும் செய்திகளைக் காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்