திருவாரூரில் ‘இல்லம் தேடி கல்வி திட்ட’ வகுப்புக்கு சென்ற 4 மாணவர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம்
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் படிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் மின்சாரம் தாக்கி அரசு மருத்துவமனையில் அனுமதி.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் படிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் மின்சாரம் தாக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருவாதிரைமங்கலம் என்கிற ஊரில் சங்கர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கீற்று கொட்டகை அமைத்து இல்லம் தேடி கல்விக்கான வகுப்புகள் என்பது நடைபெற்று வருகிறது. அந்த கீற்றுக் கொட்டகைக்கு செல்லும் மின்சார ஒயர் என்பது அறுந்து அருகில் உள்ள கம்பி வேலியில் கிடந்துள்ளது.
இந்தநிலையில், திருவாதிரை மங்களத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சந்துரு வயது 8, ஞானவேல் என்பவரது மகன் நிஷ்வந்த் வயது 6, கரன் சந்திரபோஸ் என்பவரின் மகன் யஸ்வந்த் யுகன் வயது 9, மற்றும் மணி என்பவரின் மகன் சுரேஷ் குமார் வயது 11 ஆகியோர் இல்லம் தேடி கல்வி வகுப்பிற்கு வந்திருந்த நிலையில் அருகில் உள்ள இடத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்களும் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கம்பி வேலியை தொட்டுள்ளனர். ஏற்கெனவே கம்பியில் அறுந்து கிடந்த மின்சார ஒயரின் காரணமாக கம்பி வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி சிறுவர்கள் நால்வரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். உடனடியாக கிராம மக்கள் அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதனையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறியதுடன் இது குறித்து விசாரித்துள்ளார். மேலும் வைப்பூர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
இல்லம் தேடி கல்வித் திட்டம் நடக்கின்ற இடம் சங்கர் என்பவருக்கு சொந்தமானது. ஆகையால் அவர் வீட்டில் இருந்து சென்ற மின்சார ஒயர் எப்படி அறுந்து விழுந்தது. அதனை அவர்கள் முன்கூட்டியே பார்க்கவில்லையா? ஆபத்தான நிலையில் இருந்த மின்பெட்டியை மூடி வைக்கவில்லையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளிச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது இல்லம் தேடி கல்வி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது இந்த சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்தும் சங்கர் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர் மற்றும் அந்தப் பகுதி கிராம மக்கள் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு சிறுவர்கள் மீது மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது அந்த பகுதி மக்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்