நாங்கள் கொண்டு வந்த திட்டங்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் நினைவில் வைத்திருப்பர்... முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
கடந்த 5 ஆண்டுகளில் ஊக்கத்தொகையாக மட்டும் ரூ. 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, இதனால் 30 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்திருக்கிறார்கள்.

தஞ்சாவூர்: மரணம் அனைவருக்கும் ஒருநாள் வரத்தான் போகிறது. இந்த ஸ்டாலினுக்கும் வரும். ஆனால் இந்த ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களும், அந்த திட்டங்களால் வாழ்வு பெற்ற நெஞ்சங்களும் நிச்சயமாக நினைவில் வச்சிருப்பாங்க. அது வாழும், அதை யாரும் அழிக்க முடியாது என்று தஞ்சாவூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதுவே நமது திராவிட மாடல் ஆட்சியில இந்த ஊக்கத் தொகையை சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 70 ரூபாயிலிருந்து 156 ரூபாயாகவும், பொது ரகம் 50 ரூபாயிலிருந்து 131 ரூபாயும் உயர்த்தி வழங்கியிருக்கிறோம். அதனால் தான் நெல்லுக்கே குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்குவோம் என்று 2021-ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதை செஞ்சு காட்டியிருக்கோம். கடந்த 5 ஆண்டுகளில் ஊக்கத்தொகையாக மட்டும் ரூ. 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, இதனால் 30 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்திருக்கிறார்கள்.
அதேபோல இப்போ 2026 தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது போலவே அடுத்து அமையவிருக்கக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சியில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்கப் போகிறோம் என்று உறுதி செய்றேன். மத்திய பா.ஜனதா அரசும், அடிமை பழனிசாமியின் அ.தி.மு.க.வும் சேர்ந்து இதைத்தடுக்க என்ன முயற்சி பண்ணாலும், எவ்வளவுதான் தடுக்கத் திட்டமிட்டாலும், அதையெல்லாம் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முறியடிப்பான். உலகத்துக்கே உணவளிக்கிற விவசாயிகளுக்கு உரிய விலையை நான் நிச்சயம் உறுதி செய்வேன். முடிஞ்சா தடுத்துப் பாருங்கள்.

இந்த டெல்டா மண்டல விவசாயிகளுக்காக ஏரளாமான சாதனைகளை செய்துள்ளோம். தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக வேளாண்மைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தோம். கடந்த 5 வருஷமாக, முக்கியமாக குறித்த நாளில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்திருக்கிறோம். காவிரி டெல்டா பகுதிகள்ல 24,833 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரக் கூடிய பணிகள் ரூ.459 கோடியில் மேற்கொண்டு கடைமடை விவசாயிகள் போற்றக்கூடிய நிர்வாகத்தை வழங்கியிருக்கிறோம். 2021-2022 முதல் கடந்த ஆண்டு வரை குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் வழங்கியிருக்கிறோம்.
ஆனால் பழனிசாமி ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்யப்பட்டது எல்லாம் வெறும் வேதனைகள் தான். விவசாயிகளுக்கு அவர் செய்த துரோகங்கள் ஒன்றா, இரண்டா? அதையெல்லாம் ஒரு நாள் போதுமா சொல்வதற்கு? போதாது. காவிரி காப்பாளன்னு தனக்குத்தானே பட்டப் பெயரு வச்சுக்கிட்டாரு. அவர் உண்மையான விவசாயியாக இருந்தால் இந்தியா முழுக்க உழவர் பெருமக்கள் எதிர்த்துப் போரடிய போது 3 வேளாண் சட்டங்களை ஆதரித்திருப்பாரா? போராட்டம் செய்த விவசாயிகளை புரோக்கர்னு வாய்கூசாம சொன்ன புளுகு மூட்டைதான் இந்த பழனிசாமி.
அ.தி.மு.க. ஆட்சியில இந்த டெல்டா மாவட்டங்களில் இயற்கைச் சீற்றம் நடந்தப்போது இங்குள்ள மக்களைக் காப்பாற்றினாரா பழனிசாமி? இந்த டெல்டா மாவட்டத்தை சேர்ந்த அன்றைய அமைச்சர் ஓ.எஸ். மணியன் வந்தப்போ மக்கள் விரட்டியடித்தார்கள். சுவர் மேல ஏறி குதிச்சு அவர் தப்பிச்சு ஓடுன நிலைமை எல்லாம் ஏற்பட்டுச்சு, நீங்கள் எல்லாம் அதை பார்த்திருப்பீங்க. அதெல்லாம் நினைவில்லையா? விவசாயிகளுக்கு பி.எம். கிசான் திட்டத்தில் ரூ.110 கோடி ஊழல் நடந்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான். விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிதியை யாருக்கோ கொடுத்தார் பழனிசாமி.
இதுதான் போலி விவசாயியான பழனிசாமி ஆட்சி செஞ்ச லட்சணம். இப்படிப்பட்டவர் யாருகிட்ட சேர்ந்திருக்கார்? பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் சேர்ந்துள்ளார். வணிக சிலிண்டர்கள் விலையை ஏற்றி வியாபாரிகளின் தலையில இடியை இறக்கி இருக்கிறார் மோடி. இதனால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வணிகர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலிண்டர் தட்டுப்பாட்டால பல உணவகங்களை மூடிவிட்டனர். ஓட்டல்களில் சில ஐட்டம் மட்டும் தான் தயாரிக்கிறார்கள். ஓட்டல் நடத்துறவங்களுக்கு கஷ்டம், அங்க வேலை செய்றவங்களுக்கு இப்ப வேலையும் பறிபோயிடுச்சு. அவசரம், அவசரமாக மோடி அவர்கள் கூட்டம் கூட்டினாரு. ஆனா உருப்படியா எதுவும் பண்ணல. ஏன்னா பா.ஜனதா ஆளாத மாநிலங்களில் அதிகாரிகளை எப்படி பந்தாடலாம் என்பது தான் மத்திய அரசினுடைய மொத்த கவனமும் இப்ப இருக்கிறது.
தேர்தலில் தோற்றுவிடும் பயத்தில் ஏற்கனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்னு சொல்லிக்கொண்டு வந்து இந்தியா முழுக்க கோடிக்கணக்கான மக்களுடைய வாக்குரிமையை பறித்து விட்டனர். அதை முடித்து அடுத்து தமிழ்நாட்டுல தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை நியமிச்சு தேர்தல்ல தில்லுமுல்லு பண்ணலாம்னு பார்க்குறாங்க. எத்தனையோ தேர்தலை தமிழ்நாடு பார்த்திருக்கு. அமைதியான தேர்தலுக்கு தமிழ்நாடுதான் சிறந்த உதாரணம். அப்படிப்பட்ட நம்ம மாநிலத்துல முதல் முறையா தேர்தலை காரணங்காட்டி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை இப்ப மாற்றி உள்ளனர்.
இவ்வளவு பயம் எதற்கு அவர்களுக்கு. வாக்களிக்கிற மக்கள் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் வேண்டும் என்று முடிவு செய்து விட்டனர். ஏன் இதை தேர்தல் ஆணையமும், பா.ஜனதாவும் உணராம இருக்கிறார்கள். கடந்த 2021 தேர்தலின் போது முதல்வர் ஆகும் யோகம் ஸ்டாலினுக்கு இல்லைன்னு சொல்லிட்டு திரிந்தனர். கட்டம் சரியில்லை என்றனர். யோகத்தை, அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பவனா நான். என்னுடைய உழைப்பை நம்புறவன். தலைவர் கலைஞர் கிட்ட உழைப்பைக் கற்றுக்கொண்ட மாணவன் நான். அது போல இப்போது தி.மு.க.வுல யாரும் தொடர்ந்து 2 முறை யாரும் முதல்வர் ஆக முடியாதுன் சொல்றாங்க. அதையும் உடைக்கிறேன் பாருங்க. என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய உடன்பிறப்புகள், மக்கள் நம்பக்கம் இருக்கிறார்கள். எல்லாத்தையும் உடைச்சு 2021-ல் பெற்றதை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம்.
எதிரிகள் வெட்டிக்கதை பேசிட்டு கனவு காண்கிறார்கள். நாம தமிழ்நாட்டை முன்னேற்றுகிற கனவைக் காண்போம். 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆளும் வாய்ப்பு தி.மு.க.வுக்கு கிடைச்சா, கிடைக்கும் கிடைச்சா தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கும்னு 2031-ல நாம காட்டுவோம். சூப்பர் ஸ்டார் யாருனுக்கு கேட்டா அது நமது தேர்தல் அறிக்கை தான். அதில் ஏராளமான வாக்குறுகள் அளித்துள்ளோம்.
தஞ்சை மாவட்டம் தென்பெரம்பூரில் புதிய பாலம் கட்டப்படும். ஈச்சங்கோட்டை முதல் வெட்டிக்காடு வரை கல்லணை கால்வாய் ரூ.40 கோடியில் அகலப்படுத்தப்படும். தஞ்சையில் மண்டல அளவிலான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். தஞ்சையில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள், தஞ்சையிலே உணவு பதப்படுத்துதல் குழுமம், பட்டுக்கோட்டையில வேளாண் தொழிற்பூங்கா, தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், வாய்ப்பிருக்கும் அனைத்து இடங்களிலும் உலர் களத்துடன் கூடிய நிரந்தர கட்டடங்களாக கட்டித் தருவோம். டெல்டா மாவட்டங்களில் 10,500 கிலோமீட்டர் நிலத்திற்கு சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட 1½ லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நகரும் நெல் உலர்த்திகள் தேவைக்கேற்ப வழங்கப்படும்.
டெல்லியின் காலடியிலே தமிழ்நாட்டை அடகு வைக்கிறது பழனிசாமியோட விருப்பம். தமிழ்நாட்டினுடைய மாநில உரிமைகளையும் சுயமரியாதையையும் அடகு வைக்கத் தடையா இருக்கிறது இந்த ஸ்டாலின். ஆனால் இப்போ 2 நாட்களாக 'இந்த ஸ்டாலின் போய் சேரணும் என்று தன்னுடைய ஆழ்மன விருப்பங்களை, அடிமனசுல இருக்கிற வக்கிரங்களை பழனிசாமி இப்போ கூட்டத்துல பேச ஆரம்பிச்சிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே பிறந்த எல்லாரும் ஒருநாள் இறக்கத்தான் போறாங்க. மரணம் எல்லாருக்கும் ஏதோ ஒருநாள் வரத்தான் போகுது. இந்த ஸ்டாலினுக்கும் வரும். ஆனால் இந்த ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களும், அந்த திட்டங்களால வாழ்வு பெற்ற நெஞ்சங்களும் நிச்சயமாக நினைவில் வச்சிருப்பாங்க. அது வாழும், அதை யாரும் அழிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை தலை சிறந்த தமிழ்நாட்டை, தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க என்னுடைய இறுதி மூச்சு வரை நான் ஓய்வில்லாமல் உழைப்பேன். இவ்வாறு அவர் கூறினார். டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















