ஆட்கள் கிடைப்பது அரிது... கை கொடுக்கும் இயந்திரங்கள்: அசத்தும் விவசாயிகள்
தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக நெல் உள்ளது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சியில் விவசாயப்பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் இயந்திரங்கள் வாயிலாக நாற்று நடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் இயந்திர நடவையே மேற்கெண்டு வருகின்றனர். பணமும், நேரமும் மிச்சமாகிறது என்று தெரிவிக்கின்றனர்.
தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிர்
தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக நெல் உள்ளது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி மும்முரமாக நடந்து வருகிறது. மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் காலதாமதமாக திறக்கப்பட்டது.
மேலும் மழையும் சரியாக பெய்யாத நிலையில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, வல்லம், 8.கரம்பை, கல்விராயன் பேட்டை, சித்திரக்குடி, கள்ளப்பெரம்பூர், சக்கரசாமந்தம் உட்பட பல பகுதிகளில் ஆற்றுப்பாசனத்தை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் குறுவை சாகுபடியை செய்யவில்லை. பம்ப்செட் வசதி உள்ள விவசாயிகள் மட்டும் குறுவை சாகுபடி செய்து அறுவடையை முடித்தனர்.
ஒரு போக சம்பா சாகுபடி பணிகள்
இந்நிலையில் தற்போது ஆற்றில் தண்ணீர் வருவதால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். சில விவசாயிகள் நேரடி விதைப்பாகவும், நாற்று விட்டும் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். பல விவசாயிகள் பாய் நாற்றங்கால் முறையில் சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு கை கொடுக்கும் இயந்திரங்கள்
அந்த வகையில் தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் விவசாயிகள் பாய் நாற்றங்கால் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக நாற்று நடும் சிறிய இயந்திரத்தை கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இப்பகுதியில் பல்வேறு விவசாயிகளும் பாய் நாற்றங்காலை மேற்கொள்ள முக்கிய காரணமாக விவசாயப்பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
ஒரு போக சம்பா சாகுபடியை பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் மேற்கொள்வதால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயப்பணிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனால் களை எடுப்பது, நாற்று நடுவது போன்ற பணிகளை விவசாயிகள் இயந்திரங்களை கொண்டு செய்து வருகின்றனர்.
விவசாயப்பணிக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகிறது
இதுகுறித்து ராமநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த விவசாயி வீரராகவன் கூறியதாவது; தற்போது விவசாயப்பணிக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் பாய் நாற்றங்கால் சாகுபடியை மேற்கொண்டு இயந்திர நடவு செய்து வருகிறோம். கூடுதல் சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் செல்கின்றனர். இதனால் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் வெளி மாநில ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் நாற்று நடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கணும்
தற்போது மழை மற்றும் ஆற்றில் வரும் தண்ணீரை நம்பி ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொண்டுள்ளோம். தற்போது விட்டு விட்டு மழை பெய்வதால் நெல் பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படக்கூடாது என்பதற்காக பூச்சி மருந்து அடித்து வருகிறோம். இனி வரும் நாட்களில் உரங்கள் தேவை இருக்கும். அதை தட்டுப்பாடின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.