வருவாரா வைத்திலிங்கம் ?- பூட்டிக்கிடக்கும் ஒரத்தநாடு எம்.எல்.ஏ அலுவலகம் - வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் மக்கள்
முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் தஞ்சாவூரில் வசித்து வந்தாலும், தினமும் அலுவலகத்தில் வந்து செல்வார். ஆனால் சொந்த ஊரில் எம்எல்ஏவாக உள்ள வைத்திலிங்கம், அலுவலகத்திற்கு வராமல் உள்ளதாக குற்றச்சாட்டு
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியும் ஒன்றாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தின் 16 வது சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு மே மாதம் 2ஆம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளராக இருந்த வைத்திலிங்கம்வெற்றி பெற்றார். அதன் பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து தொகுதிகளிலும் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 7 மாதங்களாக ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எந்த செயல்பாடும் இன்றி பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக ஒரத்தநாடு தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத ஒரு அவல நிலை உள்ளது. எனவே, ஒரத்தநாடு தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றிட, உடனடியாக ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து, சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து செயல்பட வேண்டும் என பொது மக்கள் மற்றும் ஒரத்தநாடு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தொகுதி மக்கள் கூறுகையில், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக, அதிமுகவைச் சேர்ந்த துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் தேர்வு செய்யப்பட்டார் என்பதும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக ஒரத்தநாட்டில் மட்டுமே வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.கடந்த ஆட்சி காலத்தில் திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன் எம்எல்ஏவாக இருந்தார், அப்போது, அன்றாடம் எம்எல்ஏ அலுவலகத்திற்கு வந்து விட்டு செல்வார். இதனால் ஒரத்தநாடு தொகுதி மக்கள்,தங்களது குறைகளை தெரிவித்து, மனுக்களை கொடுத்து வந்தனர். முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் தஞ்சாவூரில் வசித்து வந்தாலும், தினந்தோறும் ஒரத்தநாட்டிலுள்ள அலுவலகத்தில் வந்து செல்வார். ஆனால் சொந்த ஊரில் எம்எல்ஏவாக உள்ள வைத்தியலிங்கம், எம்எல்ஏ அலுவலகத்திற்கு வராததால் வேடிக்கையாக உள்ளது.
ஆனால் தற்போது எம்எல்ஏவாக உள்ள வைத்தியலிங்கம், கடந்த தேர்தலின் போது, தொகுதி மக்கள், தோற்கடித்தால், மக்கள் மேல் அதிர்ப்தி அடைந்துள்ளார். இந்த முறை வாக்காளர்களை, முறையாக கவனித்தால் வெற்றி பெற்றார். ஏழை எளிய, நடுத்தர மக்கள், தங்களது கோரிக்கைகளை, எம்எல்ஏ வீட்டிற்கோ, கட்சி அலுவலகத்திற்கோ சென்றால், அங்குள்ளவர்கள், சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பி விடுவார்கள். தொகுதி மக்கள், தங்களின் குறைகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான எம்எல்ஏவை சந்தித்து, தங்களது குறைகளை கூறினால், அவர்களுக்கு நிம்மதி, பணிகளை நடைபெறும் என்று இருப்பார்கள்.
ஆனால், ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்தியலிங்கம், அலுவலகத்திற்கே வராமல் இருப்பது, வாக்களித்த மக்களையும், தொகுதி மக்களையும் ஏமாற்றும் வேலையாகும்.எனவே, ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்தியலிங்கம், எம்எல்ஏ அலுவலகத்திற்கு வந்து திறந்து, தொகுதி மக்களை சந்திக்காவிட்டால், விரைவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் எம்எல்ஏவை காணாவில்லை என்று போஸ்ட்ர் அடித்து தொகுதி முழுவதும் ஒட்டி போராட்டம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.