Thanjavur Big Temple: இப்படிதான் இனி வந்தாகணும்... தஞ்சை பெரியகோயிலில் ஆடை கட்டுப்பாடு அறிவிப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி
Thanjavur Big Temple Dress Code: அரை கால் டவுசர், லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணிக்க இந்து அறநிலைய அறிவுறுத்தி உள்ளது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.
தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்ட கோவிலை காட்டியது உலக அதிசயமாக பார்க்கப்படுகிறது. 10ம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக்கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் ஆனது. இக்கோயிலுக்கு வெளி மாவட்ட, மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாட்டினரும் ஏராளமானோர் வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்து கோவில்களில், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், பாரம்பரிய ஆடைகளை அணிந்து வரவேண்டும், முறையற்ற இறுக்கமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல்வேறு கோவில்களில் இந்த திட்டம் அமலுக்கு வரவில்லை.
இதையடுத்து பல்வேறு தரப்பினர் ஆடை கட்டுப்பாட்டை கோவில்களில் முறையாக கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி, அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் ஆடை கட்டுப்பாட்டை தீவிரமாக கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என மீண்டும் உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து, உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் முதல் உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்லும் நிலையில், அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில், கோவிலில் ஆடை கட்டுப்பாடு குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பு பலகையில் ஆண்கள் வேஷ்டி, பேண்ட், சட்டையும், பெண்கள் புடவை,தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் குழந்தைகள் உடல் முழுவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிந்து கோவில்களுக்குள் வரலாம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், அரை கால் டவுசர், லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு வெளிநாட்டினருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை பொருத்தவரை அவர்கள் அதிகம் அணிவது அரைக்கால் டிராயர் மற்றும் லெகின்ஸ் போன்ற உடலை இறுக்கி பிடிக்கும் உடைகள்தான். அவர்களை எப்படி கட்டுப்படுத்தவது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இனி வரும் நாட்களில் இந்த உத்தரவு எப்படி கையாளப்படுகிறது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.