Thanjavur: கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வாயிலில் தூய்மைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தினக்கூலியை 550 லிருந்து 650 ஆக உயர்த்தி கொடுக்க மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையை உடனே வழங்கிட வேண்டும்.
தஞ்சாவூர்: தஞ்சை மாநகர தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா தலைமை எதிர்த்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிலையில் தஞ்சை மாவட்ட தூய்மை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் கலியபெருமாள் தலைமையில் துணைதலைவர் ஆனந்தராஜ், வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் வந்தனர்.
தூய்மை பணியாளர்களை புதிதாக டெண்டர் எடுத்த நிறுவனம் அல்லது முகமை யார் என்பதை அறிவிக்க வேண்டும். ஒப்பந்தம், உத்தரவின் விபரத்தை வழங்க வேண்டும். ஆய்வு கூட்டங்களை மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் கொண்டு வெளிப்படை தன்மையின்றி நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் எங்களை அனுமதிக்க வேண்டும்.
தஞ்சை மாநகர தூய்மை பணியாளர்கள் சார்பில் தினக்கூலியை 550 லிருந்து 650 ஆக உயர்த்தி கொடுக்க மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையை உடனே வழங்கிட வேண்டும். மாநகராட்சியில் பணிபுரியும் மாநகர தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்திற்கு தெரிவிக்காமல் புதிய தூய்மை பணியாளர்களை நியமிக்க கூடாது. தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.550 தினக்கூலியில் முறைகேடாக 50 ஐ பிடித்தம் செய்து புதிதாக சேர்க்கப்படும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க கூடாது.
தற்போது ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் எங்களை 3 லிருந்து 5 நாட்களுக்கு வரவில்லை என்று (Absent) முறைகேடாக பதிவு செய்து ரூ.1650 லிருந்து ரூ.2750 வரை பிடித்தம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2 மாத காலமாக எங்களுக்கு முழுமையான சம்பளத்தை தராமல் பிடித்தம் செய்துள்ள EPF, ESI விபரத்தையும், சம்பள விபரத்தையும் ரசீது ஆகவும், 300 நபர்களின் பெயர் விபரங்களும் தொகுப்பாக வழங்க வேண்டும் என போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வாயிலில் திடீரென அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடன் பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் தூய்மை பணியாளர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இருப்பினும் கலெக்டர் எங்கள் கோரிக்கை மனுவை பெரும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டனர். இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து தூய்மைப்பணியாளர்கள் தங்களின் காத்திருப்பு போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.