அமைதியாக இருக்க சொன்னது குத்தமா..? கிராம சபா கூட்டத்தில் தாக்கப்பட்ட வார்டு உறுப்பினர்
தீர்மானங்களை எழுத்துப்பூர்வமாக கேட்டவரை அமைதியாக இருக்க சொன்னார் வார்டு உறுப்பினர். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் வார்டு உறுப்பினரை தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சுதந்திரத் தினத்தை ஒட்டி நேற்று தஞ்சை மாவட்டம் முழுவதும் கிராம சபா கூட்டம் நடந்தது. இதில் தீர்மானங்களை எழுத்துப்பூர்வமாக கேட்டவரை அமைதியாக இருக்க சொன்னார் வார்டு உறுப்பினர். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் வார்டு உறுப்பினரை தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் வாளபுரம் கிராமத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. ஊராட்சித்தலைவர் சுமதி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலக கண்காணிப்பாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் போது பொதுமக்களிடம் தலைவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த துரையப்பன் மகன் மதியழகன்(45) என்பவர் அனைத்து தீர்மானங்களையும் எழுத்துப்பூர்வமாக கேட்டார். அப்போது, 1-வது வார்டு உறுப்பினர் துளசிபாஸ்கர், அமைதியாக இருக்குமாறு மதியழகனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதியழகன், துளசியை சரமாரியாக தாக்க இதில் பலத்த காயமடைந்த அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து துளசி தாலுகா போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரபரப்புக்கு பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று முடிவடைந்தது.
பாபுராஜபுரத்தில் கிராம சபா: கும்பகோணம் வட்டம் பாபுராஜபுரம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. சுதந்திரத்தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது.
இதனை முன்னிட்டு பாபுராஜபுரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் மகேஸ்வரி கணேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிச்சையம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், குடிநீர், சாலை வசதி, 100 நாள் வேலைத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், பொது மக்களின் அனைத்து கோரிக்கைகளும் அந்தந்த துறைக்கு அனுப்பி வைத்துத் தீர்வு காணப்படும், உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக செல்போனில் தெரிவித்தால் தீர்வு காணப்படும் என்றார்.
மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கும்பகோணம் கோட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களில் பொது விருந்து நடைபெற்றது. சுவாமிமலை முருகன் கோயில் மற்றும் கும்பேஸ்வரர் கோயிலில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், நாகேஸ்வரர் கோயிலில் மண்டலக்குழுத் தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் பொது விருந்தில் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், கும்பகோணம் வட்டம் தேனாம்படுகை கிராமத்திலுள்ள சிமிலிமேடு பகுதியில் நடந்த பொது விருந்தில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், கோட்டாட்சியர் லதா, வட்டாட்சியர் தங்கபிரபாகரன், காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் உட்பட பலர் கிராமமக்களுடன் உணவருந்தினர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்