சுட்டெரிக்கும் கோடை வெயில்...சமாளிக்க சாத்துக்குடிகளை வாங்கி செல்லும் மக்கள்
கோடை வெப்பத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் அம்சமாக சாத்துக்குடி பழங்கள் உள்ளன. விலையும் குறைவு என்பதால் அதிகளவில் விற்பனையாகிறது.
தஞ்சாவூர்: ஒரு பக்கம் கோடை வெயில் சுட்டெரிக்க மறுபுறம் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் என்று தஞ்சை மாவட்டமே பரபரக்கிறது. இதில் கோடை வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் அதிகளவில் சாத்துக்குடி பழங்களை வாங்கி செல்கின்றனர்.
தஞ்சாவூரில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சாத்துகுடி விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. 2 கிலோ சாத்துக்குடி ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சற்று சிறிய பழங்களாக இருந்தால் இரண்டரை கிலோ ரூ.100 என்று விற்பனைக்கு வந்துள்ளது.
தஞ்சாவூர், காய்கறி பழ மார்க்கெட்டுக்கு வெளி மாவட்டம் வெளி மாநிலத்தில் இருந்து சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதை தவிர்த்து வருகின்றனர். மாலை 5 மணிக்கு மேல் தான் பொதுமக்களின் நடமாட்டம் இருந்து வருகிறது. வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் சாத்துக்குடி பழங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். சாத்துக்குடி ஜுஸ் உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. கோடை வெயிலில் இருந்தும், தண்ணீர் தாகத்தையும் போக்கும் என்பதால் தஞ்சையில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு போட்டியாக ஆங்காங்கே ஒலிப்பெருக்கி கட்டப்பட்ட வேன்களில் சாத்துக்குடி குவியல், குவியலாக கொண்டு வந்துழ விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் நான்கு சக்கர வாகனத்தில் சாத்துக்குடி பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகரித்து உள்ளதால் சாத்துக்குடி விலை சரிந்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை ஆகிறது. அதேபோல் சில்லரை விற்பனை நான்கு சக்கர வாகனத்தில் 2 கிலோ சாத்துக்குடி ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதிய நேரத்தில் மக்கள் வரத்து குறைவாக இருப்பதால் வேன்களில் கொண்டு வரப்படும் சாத்துக்குடி பழங்களை தெருக்களின் உள்ளே சென்று வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதனால் வீடு தேடி வரும் சாத்துக்குடி பழங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து சாத்துக்குடி மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில்,”கடந்த ஆண்டு இதே நேரத்தில் மொத்த விற்பனையில் சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை சரிவால் சாத்துக்குடி பழங்களின் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. அதனை சாலையில் செல்லும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். ஜூஸ் கடை வைத்திருப்பவர்களும் அதிக அளவில் சாத்துக்குடி பழங்களை வாங்கி செல்கின்றனர்” என்றார்.
பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும். ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.
சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும். முக்கியமாக இந்த கோடை வெப்பத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் அம்சமாக சாத்துக்குடி பழங்கள் உள்ளன. விலையும் குறைவு என்பதால் அதிகளவில் விற்பனையாகிறது” என்றனர்