“கண்டுபிடித்து தாங்க... ரூ.20 ஆயிரம் தர்றோம்”: சிம்பாவுக்காக போஸ்டர் அடித்து ஒட்டிய பாசக்கார எஜமானர்
தஞ்சை நகரின் பல பகுதிகளில் வளர்ப்பு நாயைக் காணவில்லை. கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ.20 ஆயிரம் பரிசு என்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை நகரின் பல பகுதிகளில் வளர்ப்பு நாயைக் காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.20 ஆயிரம் பரிசு என்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் நாய் உரிமையாளரின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதாக பொதுமக்கள் பேசி வருகின்றனர்.
பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் அளிக்கும் அன்பு
அன்பு என்பது நமக்கு பிடித்தவர்கள் மீது நாம் செலுத்தும் ஒரு உணர்வாகும். அந்த உணர்வானது யார் மீது வேண்டுமானாலும் வரலாம். அன்பு என்பது மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கம் ஆகும். உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் அன்பு குறிக்கிறது. பொதுவாக அன்பு வலுவாகவும், உண்மையான அனுபவமாகவும் இருக்கிறது என்றால் மிகையில்லை. மனிதர்கள் மீது வைக்கும் அன்பாக இருந்தாலும் சரி, உயிரினங்கள் மீது வைக்கும் பாசமாக இருந்தாலும் சரி வலுவானதாகவே அமையும்.
வளர்ப்பு நாய் காணவில்லை
எவ்வளவு கோபத்தையும் அன்பு மறக்க வைத்து விடும். அன்பு என்பது ஒரு சிறந்த பரிசு. அதை பெற்றாலும் கொடுத்தாலும் சந்தோஷம்தான். அன்பு என்பது போர் செய்வது போன்றது துவங்குவது சுலபம் ஆனால் நிறுத்துவது கடினம். அதுபோல் பலரும் தாங்கள் வளர்க்கும் உயிரினங்கள் மீது வெகுவாக அன்பு செலுத்துவார்கள். தங்களின் குடும்பத்தில் ஒருவர் போல் பாதுகாத்து வளர்ப்பார்கள். அந்த வகையில் தாங்கள் வளர்த்த நாயை காணவில்லை என்பதால் மிகுந்த வேதனையில் அதனை வளர்த்தவர்கள் தஞ்சை நகர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு என்றும் அறிவித்துள்ளனர். இதுதான் தஞ்சை மக்களின் மனதை நெகிழ செய்துள்ளது.
ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகை அறிவிப்பு
தஞ்சையில் காணாமல் போன வளர்ப்பு நாயைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்து நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி தனது வளர்ப்பு பிராணி மீதான பாசத்தை எஜமானர் வெளிப்படுத்தும் செயலாக பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர் நகரில் பல்வேறு இடங்களில் நாய் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் படத்தில் உள்ள வளர்ப்பு நாயை கடந்த 23.05.2024 முதல் காணவில்லை. நாயின் பெயர் சிம்பா, கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சார்ந்த, வெள்ளை நிறத்திலான இரண்டு வயதுடைய நாய். இதனைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழிலும், ஆங்கிலத்திலும் போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது. மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சகோதரன் போல் வளர்த்தோம் என வேதனை
அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபொழுது நாயின் உரிமையாளர் விஜயலட்சுமி வேதனையுடன் கூறியதாவது: கடந்த 23ம் தேதி தஞ்சாவூர் அசோக் நகர் பகுதியில் வீட்டில் இருந்த நாய் திடீரென காணாமல் போனது. அதனைக் குட்டியாக இருந்தபோது வாங்கி கடந்த இரண்டு வருடங்களாக வளர்த்து வருகிறோம்.
அது எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தது. அது நாய் என்பதை விட எங்களுடைய சகோதரன் போலவே மிகவும் பாசமானது. அது காணாமல் போனது முதல் பல இடங்களிலும் தேடி வருகிறோம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
போலீசிலும் புகார் கொடுத்துள்ளனர்
அதனால் தற்போது எங்கள் சிம்பாவை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரொக்கம் பரிசாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து சுவரொட்டி ஒட்டியுள்ளோம். தகவல் தெரிந்தவர்கள் எங்களுக்கு உதவலாம். நாய் காணாமல் போனது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாய் கிடைக்காததால் கவலையுடன் உள்ளோம் என்று தெரிவித்தார். அவர் பேசும் போதே குரல் வேதனையில் கம்மியது.
உரிமையாளரின் நாய் மீதான பாசம்
உலகில் பெரும்பாலான மக்கள் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். தங்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே அதனைக் கருதுகின்றனர். மேலை நாடுகளில் நாய்களை வளர்ப்போர், ஒருபடி மேலே சென்று தங்களுக்கு பிடித்தப்படி நாய்களை அலங்கரித்து வெளியே அழைத்துச் செல்வதை பெருமையான விஷயமாக கருதுகிறார்கள். தமிழகத்திலும் தங்கள் நாய் இறந்து விட்டால் அதற்கு சிலை வைப்பது, நல்லடக்கம் செய்வது, நாய்க்கு வளைகாப்பு நடத்துவது என்று பல்வேறு வகையிலும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். அதுபோல்தான் தாங்கள் வளர்த்து வந்த நிலையில் காணாமல் போன நாய்க்காக போஸ்டர் ஒட்டியுள்ள செயல், உரிமையாளரின் நாய் மீதான பாசத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.