கும்பகோணம் ஆண்கள் கல்லூரி முன்னாள் மாணவர்கள் வேதனை? எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆண்கள் கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள வரலாற்றை சித்தரிக்கும் சிற்பங்கள் சேதமடைந்து காணப்படுவது வேதனையை ஏற்படுத்துகிறது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆண்கள் கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள வரலாற்றை சித்தரிக்கும் சிற்பங்கள் சேதமடைந்து காணப்படுவது வேதனையை ஏற்படுத்துகிறது. இதை சீரமைக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவின் கேம்ப்ட்ரிஜ் என பெருமை பெற்றது
தென்னிந்தியாவின் கேம்ப்ட்ரிஜ் என அழைக்கப்படும் கும்பகோணம் ஆண்கள் கலைக்கல்லூரி 150 ஆண்டுகள் பழமையான கல்லூரி ஆகும். இந்த கல்லூரியில் கணித மேதை ராமானுஜன், சில்வர் டங் என்று அழைக்கப்படும் சீனிவாச சாஸ்திரி உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் படித்து இந்தியா மட்டுமின்றி உலகளவில் பெயர் பெற்றுள்ளனர். மேலும் இந்த கல்லூரியில் படித்தவர்கள் ஏராளமானோர் அரசியலில் முக்கிய பதிவுகளிலும், அரசு வேலையிலில் பெரிய பொறுப்புகளிலும் இருந்து வருகின்றனர். மேலும் தமிழக திரைத்துறையில் பல்வேறு இயக்குனர்களையும் உருவாக்கியுள்ளது.
சீயான் படித்தது இந்த கல்லூரியிலதாங்க
இந்த கல்லூரியில் ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த கல்லூரியில்தான் நடிகர் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த சேது படமும், சீயான் என்ற பெயரும் வர காரணம் இந்த கல்லூரியில் எடுக்கப்பட்ட படப்பிடிப்புதான். இந்த கல்லூரிக்கும், கோர்ட்டு சாலைக்கும் இடையே காவிரி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடந்து செல்ல மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மரப்பாலம் சேதமடைந்ததால் கடந்த 2009-ம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டது.
சேதமடைந்துள்ள சிற்பங்களால் வேதனை
அப்போது கல்லூரிக்கு செல்லும் பாலத்தின் நுழைவு வாசல் அருகே இருச்சக்கர வாகன பாதுகாப்பு மையம், அதன் எதிரில் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பத்தில் இந்த கல்லூரியிலேயே படித்த கணித மேதை ராமானுஜரின் சிற்பம், அதே போல் கல்லூரி படித்து உயர்ந்த இடத்தை பிடித்தவர்களின் சிற்பங்கள், மனிதனின் நாகரீக வளர்ச்சி உருவான கதை, புத்தகங்கள், ஆதி எழுத்துக்கள், பட்டம் பெறும் மாணவர்கள் என பல்வேறு சிறப்பங்கள் உள்ளன. இந்த நிலையில் இந்த பாலத்தின் வழியாக கல்லூரிக்கு செல்லும் பாதை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த பாதையை யாரும் பயன்படுத்தாமல் விட்டுள்ளனர். இதன்காரணமாக பாலத்தில் செடிகள் வளர்ந்து பாழடைந்து காணப்படுகிறது.
மேலும் வாசலில் அமைக்கப்பட்டிருந்த சிற்பங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் அதனை பார்ப்பதற்கு வேதனையான உள்ளதாகவும் விரைவில் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் தரப்பில் கூறுகையில், 1854-ல் கும்பகோணத்தில் ஒரு மாகாண பள்ளியாக நிறுவப்பட்டு, பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற வில்லியம் ஆர்சர் போர்ட்டர் மற்றும் டி.கோபால்ராவ் ஆகிய கல்வியாளர்களின் முயற்சியால் 1867-ல் அரசினர் கல்லூரியாக மேம்படுத்தப்பட்டது இக்கல்லூரி. இங்கிலாந்து நாட்டில் தேம்ஸ் நதிக்கரையில் எப்படி கேம்பிரிட்ஜ் கல்லூரி அமைந்துள்ளதோ, அதேபோல கும்பகோணம் காவிரி ஆற்றின் கரையில் இந்த கல்லூரி அமைக்கப்பட்டது. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் இக்கல்லூரியில் தமிழ்த் துறையின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
போதிய பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது
தமிழகத்தில் சென்னை மாநில கல்லூரி, ராணிமேரி கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, கும்பகோணம் அரசு கல்லூரி, திருநெல்வேலி இந்து கல்லூரி ஆகியவையே முதன் முதலாக அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட கல்லூரிகள். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளதால் கல்லூரியின் நுழைவு வாயில் பாரம்பரியம் மற்றும் பழைய நிகழ்வுகளை நினைவு படுத்தும் வகையில் சிற்பங்கள் வரையப்பட்டன. ஆனால் இந்த பாதையை யாரும் பயன்படுத்தாததால் சிற்பங்கள் சிதலமடைந்து வருகிறது. மேலும் முகப்பு பகுதியில் ஏராளமான மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன போதிய பாதுகாப்பு இல்லாததால் அவையும் தற்போது காணவில்லை. கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் உள்ளிட்ட சமூக நல அமைப்பு இயங்கி வருகின்றன.
கோர்ட் அருகே உள்ள வாசல் பூட்டப்பட்டுள்ளது
அதே போல் சமூக எண்ணங்கள் கொண்ட பேராசியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்கள் கண்களுக்கு இவை அனைத்து சேதமடைந்து இருப்பது தெரியவில்லை என்பது கூடுதல் வேதனையாக இருக்கிறது என்றனர். கும்பகோணம் ஆண்கள் கல்லூரிக்கு பாலக்கரையில் இருந்து பெரும்பாண்டி செல்லும் சாலையில் ஒரு வாசல் மற்றும் கும்பகோணம் கோர்ட் அருகே ஒரு வாசல் என 2 வாசல்கள் உள்ளன. தொடக்கத்தில் கும்பகோணம் கோர்ட் அருகே உள்ள வாசலை தான் அனைவரும் பயன்படுத்தி வந்தனர். தற்போது கல்லூரி உள்ளே கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோர்ட் அருகே உள்ள வாசல் பூட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த வாசலை யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஒரு சில மாணவர்கள் கல்லூரிக்கு உள்ளே சென்று வருவதற்காக பூட்டப்பட்டிருக்கும் வாசலை பயன்படுத்துகின்றனர். அதாவது ஆபத்தான முறையில் கேட்டின் மேல் ஏறி குதித்து செல்கின்றனர். எனவே கல்லூரி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.