தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பா.ஜ.,வினர் 300 பேர் கைது: தஞ்சையில் பரபரப்பு
எம்.பி., மத்திய அமைச்சர் என ஆறு முறை இருந்த பழனிமாணிக்கம், தஞ்சாவூர் தொகுதிக்கு என்ன செய்து இருக்கிறார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயிலடியில் திமுக எம்.பி., பழனிமாணிக்கத்தை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ரயிலடி பகுதியில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் கடந்த 6ம் தேதி நடந்த அம்ரித் பாரத் நிலையத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரையும், பாஜகவினரையும் திமுக எம்.பி., பழனிமாணிக்கம் அவதூறாகப் பேசியதாகக் கூறி ரயிலடியில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜகவினர் அறிவித்தனர்.
ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று பாஜகவினர் முடிவு செய்தனர். தொடர்ந்து ரயிலடியில் நேற்று மதியம் தஞ்சாவூர் சரகக் டிஐஜி ஜெயச்சந்திரன் தலைமையில், மாவட்டக் எஸ்.பி.,க்கள் தஞ்சாவூர் ஆஷிஷ் ராவத், திருவாரூர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பாஜக மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம், தெற்கு மாவட்டத் தலைவர் பி. ஜெய்சதீஷ் உள்பட பாஜகவினர் ஏராளமானோர் ரயிலடிக்கு நேற்று மாலை வந்தனர். இவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு சூழ்நிலை உருவானது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக தொல்காப்பியர் சதுக்கம், கோடியம்மன் கோவில், நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட மாவட்ட, மாநகர எல்லைகள் வழியாக வாகனங்களில் வந்த பாஜகவினரை அந்தந்த பகுதியிலேயே போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இவ்வாறு மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பாஜக மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம்.முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது; தஞ்சாவூரில் நடந்த மத்திய அரசு திட்ட துவக்க விழாவில் எம்.பி., பழனிமாணிக்கம், பா.ஜ.,வினரை அச்சுறுத்தும் விதமாகவும், 9 ஆண்டு கால ஆட்சியில் பா.ஜ., எதுவும் செய்யவில்லை என பொதுவெளியில் பேசினார். இதனை கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தோம். போலீசாரிடம் அனுமதி கேட்டு ஆறு நாட்களுக்கு மேலாகிறது. போராட்டத்திற்கு அனுமதி உண்டு என கூறி விட்டு, திடீரென்று அனுமதி கிடையாது, கைது செய்வோம் என்று கூறினர்.
மற்ற கட்சியினருக்கு அனுமதி மறுக்கிறார்கள். போலீசார் போலீசாராக இருக்கிறார்களா அல்லது அரசின் ஏவல்துறையாக இருக்கிறார்களா. எம்.பி., மத்திய அமைச்சர் என ஆறு முறை இருந்த பழனிமாணிக்கம், தஞ்சாவூர் தொகுதிக்கு என்ன செய்து இருக்கிறார். மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என பழனிமாணிக்கம் கூறினார். ஸ்மார்ட் சிட்டி, மருத்துவக்கல்லுாரி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு என பலவற்றை மத்திய அரசு செய்துள்ளது.
சிறையில் அடைத்தால் கூட போராட்டத்தை கைவிடமாட்டோம். நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி வந்து, தேசிய அளவிலான தலைவர்களை அழைத்து வந்து எம்.பி., பழனிமாணிக்கத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.