அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் வீட்டின் சிலாப் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் வீட்டின் சிலாப் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ரயிலடி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர்அகமது மகன் பைசல் (52). இவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக இன்று ஐந்து தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். அப்போது நேற்று மாலை முதல் தளத்தில் நின்று கொண்டு தொழிலாளர்கள் மேலே உள்ள கட்டிடங்களை இடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கொத்தனார் வேலை பார்க்கும் சக்கராப்பள்ளியைச் சேர்ந்த குணசேகரன் மகன் மணிகண்டன் (30), அய்யம்பேட்டையைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் குமார் (23) ஆகியோர் மீது கட்டிடத்தின் சிலாப் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இருவரும் சிக்கிக் கொண்டனர். இவர்களின் அலறல் சத்தமும், அங்கு வேலைப் பார்த்த மற்றத் தொழிலாளர்கள் கூச்சலிட்டதை கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதையடுத்து பாபநாசம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். ஆனால் சிலாப் அடியில் சிக்கியதால் இருவரும் அந்த இடத்திலேயே இறந்துவிட்டனர். தொடர்ந்து அய்யம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, இருவரது உடலையும் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் இறந்த மணிகண்டனுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அய்யம்பேட்டை, வீட்டு சிலாப், இடிந்தது, இறந்தனர், தஞ்சாவூர் மாவட்டம்