நாங்க இருக்கிறோம். எதற்கு பயம்: தஞ்சை மாநகராட்சியின் செயல்பாட்டுக்கு மக்கள் பாராட்டு
கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் தடுப்பூசி போடுவதற்காக தஞ்சை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர்: மக்கள் வெகுவாக அச்சப்பட்டு கொண்டு இருந்த நிலையில் நாங்க இருக்கிறோம். எதற்கு பயம் என்பது போல் தஞ்சை பகுதியில் தெருநாய்களை பிடிக்கும் பணியை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளது மாநகராட்சி நிர்வாகம்.
சுற்றித்திரியும் நாய்களால் அச்சம்
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமாக 51 வார்டு உள்ளது. அனைத்து வார்டுகளிலும் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். முக்கியமாக கறிக்கடைகள், உணவகங்கள் உள்ள பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதேபோல் மீன் மார்க்கெட் பகுதியிலும் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன.
விபத்துக்களில் சிக்கும் வாகன ஓட்டுனர்கள்
சில நேரங்களில் தெருநாய்கள் வெறிப்பிடித்தது போல் பொதுமக்களை துரத்தும் சம்பவங்களும் நடக்கிறது. கறிக்கடைகளில் இருந்து வீசப்படும் கழிவுகளை தின்பதற்கு ஒவ்வொன்று மோதிக் கொண்டு அந்த வழியாக தெருக்களில் வாகனத்தில் வருபவர்கள் மீது மோதி அவர்கள் விபத்துக்களில் சிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதேபோல் சிறுவர், சிறுமிகளையும் தெரு நாய்கள் துரத்துகின்றன. இதனால் பெற்றோர்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.
தெரு நாய்களை பிடிக்கும் பணியில் ஊழியர்கள்
இந்நிலையில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி தினமும் காலையில் ஒவ்வொரு வார்டுகளாக சென்று தெரு நாய்களை பிடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றை நாய்பிடிக்கும் வாகனங்கள் மூலம் கொண்டு சென்று கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநாய் தடுப்பூசி போடப்படுகிறது.
அதன்படி தஞ்சை மாநகராட்சி 9வது வார்டு மற்றும் 34வது வார்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் தடுப்பூசி போடுவதற்காக தஞ்சை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தஞ்சை மாநகராட்சி ஊழியர்களின் இந்த பணி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
துரத்தும் தெருநாய்கள்
தமிழகத்தின் ஏதாவதொரு பகுதியில் ஏதோ ஒரு குழந்தையையோ, முதியவரையோ, தெருவோரப் பாதசாரியோ, சைக்களில் சென்று கொண்டிருப்பவரையோ தெரு நாய் ஒன்று துரத்திக் கொண்டிருக்கும். சா்வதேச அளவில் இந்தியாவும், தேசிய அளவில் தமிழ்நாடும் தெரு நாய்களின் எண்ணிக்கையிலும், விஷக்கடியிலும் முதலிடம் வகிக்கின்றன என்பது பெருமைக்குரிய செயல் அல்ல. உலக வல்லரசாக வேண்டும் என்கிற கனவில் மிதக்கும் ஒரு தேசம், கட்டுப்பாடில்லாமல் வீதிகளில் தெரு நாய்கள் திரியும் தேசமாக இருக்க முடியாது, கூடாது.
கணக்கில் அடங்காத அளவிலான தெரு நாய்களின் தேசமாக இந்தியா மாறியிருக்கிறது. விஞ்ஞான ரீதியான அணுகுமுறை இல்லாமல் இதற்கு விடை காண்பது எளிதல்ல. உலக சுகாதார நிறுவனத்தின் உத்தேசப்படி, இந்தியாவில் ஆறு கோடிக்கும் அதிகமான தெரு நாய்கள் காணப்படுகின்றன.
மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்திருக்கும் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் தெரு நாய்க்கடியால் நிகழாண்டில் பாதிக்கப்பட்டவா்கள் 4.4 லட்சம் போ். நாடு முழுவதும் 27.59 லட்சம் போ் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். 4.35 லட்சம் சம்பவங்களுடன் மகாராஷ்டிரம் முதலிடத்திலும், தமிழகம் அடுத்த இடத்திலும் தெரு நாய்க்கடி பாதிப்பில் இடம் வகிக்கின்றன. இதுபோன்ற விஷயங்களை கேள்விப்பட்டு தஞ்சையை சேர்ந்த பெற்றோர்கள் பெரும் கவலையில் இருந்தனர். ஆனால் நாங்கள் இருக்கிறோம். உங்கள் பாதுகாப்பிற்கு என்பது போல் மாநகராட்சி நிர்வாகம் கிடுகிடுவென்று தெருநாய்களை பிடிக்கும் பணிகளை மும்முரமாக மேற்கொண்டுள்ளதால் மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.