தஞ்சாவூரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணிகள் மும்முரம்
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சிகுட்பட்ட 51 வார்டுகளில் பொது மக்களுக்கும் வாகன ஒட்டிகளுக்கும் இடையூறாக சுற்றிதிரியும் கால்நடைகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் இம்மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் கால்நடைகளை காப்பகத்திற்கு பிரத்யேக வாகனம் மூலம் கொண்டு சென்று பாதுகாக்கவும் மற்றும் உரிமையாளர்களுக்கு அபராத தொகை விதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாடுகளின் உரிமைதாரர்களுக்கு அபராத தொகையாக முதல் முறை பிடிபடும் மாடு ஒன்றுக்கு அபராதம் ரூ. 3000 தொகையும் மற்றும் கன்று ஒன்றுக்கு ரூ. 1500 தொகையும் வசூலிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே மாடு பிடிக்கப்படும் நிலையில் அதன் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ. 4000 தொகையும், கன்று ஒன்றுக்கு ரூ. 2000 தொகையும் வசூலிக்கப்படும். மூன்றாவது முறை அதே மாடு பிடிக்கப்பட்டால் அதன் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.5000 மற்றும் கன்று ஒன்றுக்கு ரூ. 2500 தொகையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மீண்டும் அதே மாடு தொடர்ந்து பிடிக்கப்பட்டால் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று பொதுமக்களுக்கு தஞ்சாவூர் மாநகராட்சியால் தெரிவிக்கப்பட்டு அரசிதழில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுவரை 36 மாடுகள், 38 கன்றுகளை பிடித்து கால்நடைகளை காப்பகத்திற்கு கொண்டு சென்று பாதுகாத்து மற்றும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் உள்ளிட்டவை கால்நடை காப்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கால்நடை காப்பகத்தில் பிடித்து பாதுகாக்கும் கால்நடைகளுக்கு ஏதேனும் உடல் நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக சுகாதார ஆய்வாளர் கால் நடை மருத்துவரை அணுகி கால்நடைக்கு உரிய சிகிச்சை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நேற்று வார்டு 21 சீனிவாசபுரம் பகுதியில் 2 மாடுகள் பிடிக்கப்பட்டு காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழைய பேருந்து நிலையம், ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி சாலை, மார்க்கெட் பகுதி போன்றவற்றில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.