(Source: ECI/ABP News/ABP Majha)
திருவையாறில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்; பங்கேற்று பயன் பெற்ற ஏராளமான மக்கள்
இந்த முகாமில் தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர், துணைத் தலைவர், 15 வார்டு உறுப்பினர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறில் பேரூராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாமை தொடங்கி வைத்து அனைத்து துறையினுடைய மனுக்களையும் வாங்கி குறைகளை தீர்க்கும் வண்ணமாக கேட்டறிந்தார். பின்பு அவற்றிற்கு உரிய ஆவணங்கள் உள்ளவர்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இது மக்கள் மத்தியில் வெகுவாக பாராட்டுக்களை பெற்றது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் மக்களுடன் முதல்வர் என்றும் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவையாறில் பேரூராட்சியின் சார்பாக மக்களுடன் முதல்வர் என சிறப்பு முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து முகாமை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், பேரூராட்சி தலைவர் கஸ்தூரி நாகராஜன் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
எரிசக்தி துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை, ஊரக வளர்ச்சித் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு அரசு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள், காவல்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்று திறனாளிகள் துறை என அனைத்து துறைகளும் கம்ப்யூட்டர் மூலமாக ஆன்லைன் வசதியுடன் அமைக்கப்பட்டு இருந்தது.
இதை சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு பொதுமக்கள் எந்த விதமான கோரிக்கை மனுகள் வழங்கி உள்ளார்கள் என கேட்டறிந்தார். உரிய ஆவணங்கள் இருந்தால் உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பொது மக்களை அலைய விடக்கூடாது என அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த முகாமில் தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர், துணைத் தலைவர், 15 வார்டு உறுப்பினர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவையாறு பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டிருந்த பொழுதும் தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஆர்வம் காட்டிய மக்கள் மழையை பொருட்படுத்தாமல் பட்டா, ரேஷன் கார்டு, முதியோர் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான மூன்று சைக்கிள் வாகனம், மகளிர் உரிமைத்தொகை, மருத்துவ காப்பீடு, மின் மாற்றங்கள்,வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல் , நில அளவீடு பிறப்பு இறப்பு சான்றிதழ் போன்ற உதவிகள் கேட்டு மனுக்கள் அளித்தனர். இவற்றை பெற்ற அரசு அலுவலர்கள் உரிய ஆவணங்கள் இருந்தவற்றுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.