என்ன கொடுமைங்க இது... இத்தனை இருந்தும் ஒன்றுக்கூட ஒர்க் ஆகலை: தஞ்சை பெரிய கோயிலில் பணத்தை பறிக்கொடுத்த பக்தரின் வேதனை
பெரியகோவிலில் சி.சி.டி.வி., கேமராக்களை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இந்திய தொல்லியல்துறை கண்டுக்கொள்ளவில்லை என்று பக்தர்கள் குற்றச்சாட்டு.
தஞ்சாவூர்: என்ன கொடுமை சார் இது... 36 கேமரா இருந்தும் ஒன்னு கூட ஒர்க் ஆகல. பக்தர்களோட சேஃப்டி கேள்விக்குறியாக இருக்கு. எங்க தெரியுங்களா உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் தான். காரணம் உள்ளது.
மனசு நிறைஞ்சு சாமி கும்பிட வந்த பணத்தை பறிகொடுத்து வேதனையோட போயிருக்கார் ஆந்திராவை சேர்ந்த பக்தர் ஒருவர். தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு ஆந்திர மாநிலம் சித்துாரை சேர்ந்தவர் லட்சுமணகுமார் (62) என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்ய வந்தார். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தாண்டி பிரகதீஸ்வரரை வழிபட வந்தவருக்கு பெரும் சோகம் காத்திருந்தது தெரியவில்லை.
லட்சுமண குமார் தனது தாயார் வயதானவர் என்பதால் சக்கர நாற்காலியில் வைத்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். தொடர்ந்து பெருவுடையார், பெரியநாயகி அம்மன் சன்னதியில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று பிரதோஷம் என்பதால் விளக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு நடந்த அபிஷேகத்தை மனம் குளிர பார்த்துவிட்டு கோயிலின் நுழைவாயில் பகுதியான கேரளாந்தகன் நுழைவு வாயிலுக்கு வந்தார். பிரதோஷம் முடிந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகம் என்பதால் நெருக்கி அடித்துக் கொண்டு வந்தனர்.
இதையடுத்து தன் தாயார் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை தள்ளி வந்தவருக்கு பணம் கொடுப்பதற்காக, தனது கால்சட்டை பாக்கெட்டை பார்த்தபோது லட்சுமணனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் வேஷ்டியை பிளேடால் கீறி, கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ. 15 ஆயிரத்தை பிக்பாக்கெட் அடித்து சென்றிருந்தது தெரிய வந்தது. மன நிம்மதிக்காக கோயிலுக்கு வந்த தனக்கு இப்படி ஒரு வேதனை ஏற்பட்டதால் லட்சுமணன் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றார்.
தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு கோயிலுக்கு சென்றதிலிருந்து நடந்தவற்றை யோசித்து பார்த்துள்ளார். அப்போது பெரியநாயகி அம்மன் சன்னதியில் தன்னை ஒரு நபர் இடித்துக் கொண்டு சென்றது நினைவுக்கு வர அந்த மர்மநபர்தான் பணத்தை பிக்பாக்கெட் அடித்து இருக்கலாம் என்று வலுவாக சந்தேகமடைந்த லட்சுமணகுமார், அங்கிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். மேலும் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் அங்குதான் பிரச்சினையே... பெரிய கோயிலில் 36 கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் ஒன்று கூட எதற்கும் பிரயோஜனம் இல்லை என்று கூறும் அளவிற்கு வேலை செய்யாத நிலையில் இருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை. இதனால் பணத்தை பிக்பாக்கெட் அடித்தது யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திக்கி திணறி நின்றதை கண்டு பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சி. உலக புகழ் பெற்ற பெரிய கோயிலில் இப்படி ஒரு நிலையா என்று பக்தர்கள் தலையில் அடித்து சென்றனர். தொடர்ந்து லட்சமணகுமார் அளித்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெரியகோவிலில் சி.சி.டி.வி., கேமராக்களை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இந்திய தொல்லியல்துறை கண்டுக்கொள்ளவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.