தொடர் விடுமுறையால் தஞ்சை பெரியகோயிலில் குவிந்த பக்தர்கள்... போக்குவரத்து நெரிசலால் திணறும் வாகனங்கள்
சிறுவர்களுக்கான போக்குவரத்து பூங்காவை தஞ்சை பெரிய கோவில் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்: தொடர் விடுமுறை, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் தஞ்சை பெரியக் கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தினருடன் வருகை புரிவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பெருவுடையாரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் கட்டட கலை சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். 216 அடி உயரம் கொண்ட விமான கோபுரம் மற்றும் அதன் கட்டுமான அமைப்புகளை உலக பொறியியல் வல்லுனர்கள் பார்த்து வியக்கின்றனர். தமிழர்களின் கட்டிட தலை திறனுக்குச் சான்றாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நம் கண் முன்னே நிற்கும் பிரம்மாண்டமான தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
இந்த கோவிலில் பெருவுடையார் பெரியநாயகி அம்மன் வராகி அம்மன் விநாயகர் முருகன் நடராஜர் சண்டிகேஸ்வரர் தட்சிணாமூர்த்தி பல்வேறு சன்னதிகள் உள்ளன. மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பெரிய கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
தொடர் விடுமுறையை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து உள்ளனர். சபரிமலைக்கு செல்பவர்கள் தஞ்சை வழியாக கடந்து செல்லும் போது பெரியக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். திரும்பிய பக்கம் எல்லாம் கோவில் முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வெகு நேரம் காத்து இருந்து பெருவுடையாரை வழிபட்டு செல்கின்றனர்.
பாதுகாப்புக்கு நிற்கும் போலீசார் மக்கள் கூட்டத்தை சரி செய்ய மிகவும் சிரமப்படுகிறார்கள். தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல கோயிலுக்கு எதிரேயே பார்க்கிங் வசதி இருந்தாலும் பலரும் சாலையோரங்களில் தங்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பெரிய கோயில் சாலையில் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் பழைய கோர்ட் ரோடு பகுதியல் இருபுறமும் நிறுத்தப்பட்டு இருந்தது.
தற்போது சபரிமலை மற்றும் மேல்மருவத்தூருக்கு செல்லும் பக்தர்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும் சபரிமலை சீசன் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் அதிகளவில் உள்ளது. பக்தர்கள் வரும் வேன், பஸ் போன்றவை சிவகங்கை பூங்கா, ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரி சாலை போன்றவற்றில் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருக்கும் சிறுவர்களுக்கான போக்குவரத்து பூங்காவை தஞ்சை பெரிய கோவில் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.