எல்இடி பல்பை விழுங்கிய குழந்தை; அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்த டாக்டருக்கு தந்தை கண்ணீருடன் நன்றி..!
சிறிய அளவிலான எல்இடி பல்பை விழுங்கிய குழந்தை.அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்த டாக்டர்கள்.
விளையாட்டு பொருளில் பொருத்தப்பட்டு இருந்த சிறிய அளவிலான எல்.இ.டி. பல்பு குழந்தை விழுங்கியது. இதனை தஞ்சையை சேர்ந்த தனியார் மருத்துவர்கள் ஒருமணிநேரம் மிகுந்த சிரத்தை எடுத்து அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்த சம்பவம் நடந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் சங்கர். இவர் செந்துறை அருகே பொன்பரப்பியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சபீதாபாரதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மகன் தமிழ்முகிலன். பிறந்து 10 மாதமே ஆகிறது.
கடந்த 7-ந் தேதி காலை வீட்டில் தமிழ்முகிலனுடன் அவனது அண்ணன் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது விளையாட்டு பொருளில் பொருத்தப்பட்டு இருந்த சிறிய அளவிலான எல்.இ.டி. பல்பை பற்றி தெரியாத குழந்தை தமிழ்முகிலன் கையில் வைத்து விளையாடிக் கொண்டே வாயில் வைத்து விழுங்கி விட்டான்.
இதை பார்த்த அண்ணன் தனது தந்தையிடம் தம்பி எல்.இ.டி. பல்பை தின்று விட்டான் என்று தெரிவிக்க பெற்றோர் பதற்றம் அடைந்தனர். உடனே அவர்கள் குழந்தை தமிழ் முகிலனை தூக்கிக் கொண்டு அரியலூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தனர். பின்னர் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வந்தனர்.
அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது 2 சிறிய கம்பிகள் நீட்டிக்கொண்டிருந்த நிலையில் எல்.இ.டி. பல்பை விழுங்கியது தெரிய வந்தது. உடனெ டாக்டர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து பல்பை வெளியில் எடுக்க வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர். இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அந்த எல்.இ.டி. பல்பை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.
குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் மைக்கேல் தலைமையில் பொது மற்றும் புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜீவ் மைக்கேல், குடல் அறுவை சிகிச்சை நிபுணர் மேத்யூ மைக்கேல், மயக்க மருந்து நிபுணர் குலாளன் ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். தற்போது குழந்தை உடல் நிலையில் சிறந்த முன்னேற்றம் உள்ளது.
இதுகுறித்து டாக்டர்கள் தரப்பில் கூறுகையில், குழந்தை விழுங்கிய பல்பு உணவுக்குழாய்க்குள் செல்லாமல் மூச்சுக்குழாய்க்குள் சென்று விட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை உருவானது. பல்பு வெளியே எடுக்கப்பட்ட பின்னர் தற்போது குழந்தை நன்றாக மூச்சு விடுகிறது. குழந்தைகள் எளிதில் விழுங்கும் பொருட்களை அவர்களின் கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். அதையும் மீறி எதையாவது விழுங்கிவிட்டால் கையை விட்டு அகற்றும் முயற்சியில் ஈடுபடாமல் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்.
குழந்தையின் தந்தை சங்கர் கூறுகையில், மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட நிலையில் எனது குழந்தையை இங்கு கொண்டு வந்து சேர்த்தோம். டாக்டர்கள் உரிய சிகிசை அளித்ததால் எனது குழந்தையின் உயிர் திரும்ப கிடைத்துள்ளது. இதற்காக டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்