+2 மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி - மதம் மாறச்சொல்லி வார்டன் கட்டாயப்படுத்தியதாக புகார் ?
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தனியார் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி வயிற்று வலி காரணமாக பூச்சி கொல்லி மருந்தை குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தனியார் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி வயிற்று வலி காரணமாக பூச்சி கொல்லி மருந்தை குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகானந்தம் (47). இவரின் முதல் மனைவி கனிமொழியின் மகள் லாவண்யா (17). கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். லாவண்யாவை மைக்கேல்பட்டி தூய இருதய மேல் நிலைபள்ளியில் 8 ஆம் வகுப்பில் சேர்த்து தற்போது 12 ஆம் வகுப்பில் படித்து வருகிறார். லாவன்யா பள்ளியின் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளார். மாணவி தனக்கு வயிற்று வலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். மறுதினம் 10 ம்தேதி மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.
லாவன்யாவை அவரது அழைத்து சென்று விட்டார். ஆனால் லாவன்யாவின் உடல் நிலை மோசமானதால், கடந்த 15ஆம் தேதி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதின் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலினால் பூச்சி மருந்து குடித்ததாகவும் மாணவி கூறியுள்ளார். உடனடியாக இது குறித்து டாக்டர்கள் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மாணவி லாவன்யாவிடம் புகாரை பெற்று கொண்டனர்.
இந்நிலையில் ஜனவரி 17 ஆம் தேதி லாவன்யாவின் உறவினர்கள், திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையம் முன்பு கூடி, விடுதி வார்டன், லாவன்யாவை, மதமாறச்சொல்லி வற்புறுத்தியதால் லாவன்யா பூச்சி கொல்லி மருந்தை குடித்ததாக கூறி கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் வழக்கு பதிந்து, வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து திருவையாறு குற்றவியல் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினார். இது குறித்து போலீசார் கூறுகையில், லாவன்யா வயிற்று வலி காரணமாக வலி உள்ளது என்று கூறவே, தற்காலிகமாக சிகிச்சை அளித்து, தந்தையுடம் ஒப்படைத்தனர். உடல் நிலை மோசமானதால், தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள், விஷமருந்தியது தெரிய வந்தது. பின்னர் டாக்டரிடம், விடுதி வார்டன், அறைகளை சுத்தம் செய்யவும், வேலைகளை அதிகமாக கொடுத்ததால் மன உளைச்சல் காரணமாக விஷம் அருந்தியதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் லாவன்யாவின் உறவினர்கள், மதமாறச்சொல்லி துன்புறத்தியதாக புகார் அளித்ததால், விடுதி வார்டனை கைது செய்துள்ளோம் என்றார். விடுதி சார்பில் கூறுகையில், லாவன்யாவின் தாய் இறந்தவுடன் கடந்த 5 ஆண்டுகளாக விடுதியிலேயே இருந்து வந்துள்ளார். விடுமுறைக்கு கூட, தந்தை வீட்டிற்கு செல்லவில்லை. லாவன்யா விஷம் அருந்தியதற்கான உண்மையான காரணத்தை, போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்றனர்.