"ஆனந்த கண்ணீர்... அட்டகாச அசைவ விருந்து" எங்கே ? யாருக்கு தெரியுமா?
பிரபல அசைவ உணவகத்தில் தடபுடலாக அசைவ விருந்து... சிக்கன் , மட்டன்,. மீன், இறால், நண்டு என விருந்தளித்து அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கி, ஆனந்த கண்ணீரை வரவழைத்த ஜோதி அறக்கட்டளை.

தஞ்சாவூர்: சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான். அதிலும் கௌரவப்படுத்தி அசைவ உணவுகளை அள்ளி வழங்கி தூய்மைப்பணியாளர்களை ஆட்டம், பாட்டம், குத்தாட்டம் போட வைத்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளனர் தஞ்சை ஜோதி அறக்கட்டளையினர். என்ன விஷயம் தெரியுங்களா?
கடந்த வாரம் நடைபெற்ற தஞ்சை பெரியகோவில் சித்திரை தேரோட்டத்தின் போது இறை அன்பர்கள் தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்காக ஆங்காங்கே வழங்கிய அன்னதானம் மூலமாகவும், தற்காலிக கடைகள் மூலமாகவும் நான்கு ராஜ வீதிகளிலும் குப்பைகள் டன் கணக்கில் குவிந்தன. இதன் எடை எவ்வளவு தெரியுங்களா? 22 டன். தேரோட்டம் நடந்த அன்றைய தினமே புயல் போல் உழைப்பை கொடுத்து அந்த 22 டன் குப்பைகளையும் விரைந்து அகற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கௌரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பிரபல அசைவ உணவகத்தில் தடபுடலாக அசைவ விருந்து... சிக்கன் , மட்டன்,. மீன், இறால், நண்டு என தடபுடலாக விருந்தளித்து அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கி, கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்து நெகிழ்ச்சியடைய வைத்து சந்தோஷப்படுத்தி அனுப்பி உள்ளனர் தஞ்சையை சேர்ந்த ஜோதி அறக்கட்டனை தொண்டு நிறுவனத்தினர்.

தஞ்சை மாநகராட்சியில் நிரந்தர, தற்காலிக, பணியாளர்கள், ஓட்டுனர்கள் மேற்பார்வையாளர்கள் என 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் . இந்நிலையில் கடந்த வாரம் தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது . தேரோட்டத்தின் போது பக்தர்களுக்காக பல்வேறு அமைப்பினர் மூலம் தற்காலிக அன்னதான கூடங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டது .மேலும் தற்காலிக கடைகளும் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. தேரோட்டம் நிறைவடைந்த பின்னர் ஆங்காங்கே பக்தர்கள் வீசிய குடிநீர் பாட்டில், நெகிழிப்பொருட்கள், அன்னதானம் நடைபெற்ற இடங்களில் இருந்த வாழை இலை, பாக்கு மட்டைகள் , மீதமான உணவுப்பொருட்கள் உள்ளிட்ட உணவுக் கழிவுகள் என சுமார் 22 டன் குப்பைகளை உடனுக்குடன் அகற்றித் தூய்மைப்படுத்தினர் இந்த தூய்மைப்பணியாளர்கள். அதுவும் விரைவாக அன்றைய தினமே அகற்றினர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. .
மலையளவு குவிந்த குப்பைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து அகற்றிய தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . இதற்காக தூய்மை பணியாளர்களை பிரத்யேக வாகனத்தில் ஆட்டம், பாட்டம், குத்தாட்டத்துடன் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலைய சாலையில் உள்ள பிரபல அசைவ உணவகத்துக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பிரியாணி , சிக்கன் , மட்டன் , தந்தூரி , முட்டை , மீன் , சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம் , ஆட்டுக்கால் பாயா , பெப்பர் சிக்கன் கிரேவி , மட்டன் மசாலா , நண்டு மசாலா , இறால் தொக்கு உள்ளிட்ட வகை வகையான அசைவ உணவுகளை தூய்மை பணியாளர்களுக்கு பரிமாறி ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் திக்குமுக்காட வைத்தனர் .
அப்போது தூய்மைப்பணியாளர்கள் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர் நெகிழ்ச்சியுடன வழிந்தோடியது. மேலும் தேரோட்டத்தின் போது விரைந்து பணியாற்றிய தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி ரூபாய் 50,000 ஊக்கத்தொகையாக வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளனர் ஜோதி அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தினர். முன்னதாக விருந்துக்கு வந்த தூய்மை பணியாளர்களை சந்தானம் , குங்குமம் , வெற்றிலை பாக்கு சகிதம் பன்னீர் தெளித்து மலர் தூவி அறக்கட்டளை நிர்வாகிகள் வரவேற்றனர் .

இந்த விருந்தில் கலந்து கொண்ட தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கும் போது பெரியகோவில் சித்திரை தேரோட்டத்தின் போது இரவும் பகலும் நாங்கள் செய்த தூய்மைப்பணியை பாராட்டி எங்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், கௌரவப்படுத்தும் வகையிலும் இப்படி ஒரு பெரிய உணவகத்துக்கு எங்களை தனி வாகனத்தில் ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் அழைத்து வந்தனர். தினமும் குப்பைகளுடன் வாழ்க்கை நடத்தும் எங்களுக்கு வெளிஉலகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற உற்சாகத்தில் வாகனத்தில் ஆடிப்பாடி மகிழ்வாக வந்தோம் . இங்கு எங்களுக்கு சிக்கன் மட்டன் மீன் இடியாப்பம் ஆட்டுக்கால்பாயா நண்டு இறால் என்று எல்லா வகை அசைவ உணவுகளையும் அன்போடு பரிமாறினார்கள் . மேலும் கரும்பு தின்ன கூலியா என்று வியக்கும் வகையில் இன்ப அதிர்ச்சியாக எங்கள் அனைவருக்கும் பணமும் பரிசாக கொடுத்து ஆச்சர்யப்பட வைத்தனர் என்று வார்த்தைகளை நெஞ்சத்தில் இருந்து நெகிழ்ச்சியுடன் கூறினர். .
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி, நிர்வாக உதவியாளர் குகனேஸ்வரி தன்னார்வலர்கள் ஆர்த்தி , கல்யாண சுந்தரம் மற்றும் பலர் செய்திருந்தனர். அவர்கள் விரைவாக தூய்மைப்பணியை மேற்கொண்டதற்குதான் இந்த விருந்து.





















