தஞ்சை: திருநாகேஸ்வரம் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம் - வரும் 24ஆம் தேதி குடமுழுக்கு
''5 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், வரும் 24 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது''
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை தொடக்கம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் வரும் 24-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளதையொட்டி யாகசாலை பூஜை தொடங்கியது.
திருநாகேஸ்வரம் நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேட தலம் என்ற பெருமை உடையதாகும். நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இக்கோயில் சேக்கிழார் திருப்பணி செய்த தலமாகும். நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.
திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் நவக்கிரக கோயில்களில் முக்கியமாக திகழும் ராகு பகவான் தனது இரு மனைவிகளோடு இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் ராகு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இக்கோயில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது 5 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், வரும் 24 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 21ஆம் தேதி முதலாம் கால யாகசாலை பூஜையும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.
22 ஆம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், 23 ஆம் தேதி, 4 மற்றும் 5 ஆம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 24 ஆம் தேதி காலை 5 மணிக்கு 6 ஆம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து திருக்கடங்கள் புறப்பட்டு காலை 7 மணிக்கு அனைத்து பரிவார தெய்வ விமானங்களுக்கு குடமுழுக்கும், தொடர்ந்து காலை 10.30 மணிக்கு ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. பின்னர் மகாதீபாரதனை நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.