தஞ்சை: பணி மாறுதலில் செல்லாத அதிகாரியை பூட்டி சிறை வைத்த பெண்கள்
’’2 சாவிகளையும் சரவணன் எடுத்து சென்றதால் தைக்கப்பட்ட இலவச சீருடைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என பெண்கள் புகார்’’
தஞ்சாவூரில் பணிமாறுதலில் செல்லாத அதிகாரியை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி பெண்கள் சிறை பிடித்த பெண்கள் தைக்கப்பட்ட இலவச சீருடைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியாமல் தேங்கி கிடக்கிறது. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள குந்தவை நாச்சியார் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தின் தொழிற்கூட்டுறவு அலுவலராக பணியாற்றி வந்த சரவணன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அமுதசுரபி சாக்குட்டி தயாரிப்பு கூட்டுறவு மகளிர் சங்கத்திற்கு கடந்த 17 ஆம் தேதி பணி மாறுதல் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக சேதுபாவாசத்திரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த முருகையன், பதவி உயர்வு பெற்று, தொழிற்கூட்டுறவு அலுவலராக குந்தவை நாச்சியார் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. இதனால் கடந்த 19ஆம் தேதி தொழிற்கூட்டுறவு அலுவலராக முருகையன் பொறுப்பு ஏற்று கொண்டார். இந்நிலையில் பணிமாறுதல் வழங்கப்பட்ட சரவணன், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாக விடுமுறை எடுத்து சென்றார். பின்னர், சரவணன், கடந்த 20ஆம் தேதி திடீரென குந்தவைநாச்சியார் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்திற்கு நேரில் வந்து பீரோ சாவியை ஊழியர்களிடம் வாங்கி சென்று விட்டார். சரவணன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்து, தனது பணி மாறுதலை ரத்து செய்து இடைக்கால தடை ஆணை பெற்றார். இந்நிலையில் குந்தவைநாச்சியார் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்திற்கு, வந்த சரவணன், தொழிற்கூட்டுறவு அலுவலர் அறைக்கு சென்று அமர்ந்தார். அதே அறைக்கு புதிதாக பொறுப்பு ஏற்ற முருகையனும் வந்தார்.
இதனையறிந்த, கூட்டுறவு சங்க உறுப்பினர்களான ஏராளமான பெண்களும் அங்கே திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவரை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி சிறை பிடித்தனர். அவரிடம் இருந்து சாவிகளையும் வாங்கினர். இதை அறிந்த தஞ்சை தெற்கு போலீசார் அங்கு வந்து, அலுவலகத்தை திறந்து உள்ளே சென்று சரவணனை மீட்டனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, பணி மாறுதல் ரத்து செய்யப்பட்டு இடைக்கால தடை ஆணை வாங்கிய கோர்ட்டின் தீர்ப்பு நகலையும், இது தொடர்பாக சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலக இயக்குனருக்கு அனுப்பிய கடித நகலையும் காண்பித்தார். முருகையனிடம் விசாரித்தபோது, அவர் தனக்கு பணிமாறுதல் வழங்கப்பட்ட கடித நகலையும், ஏற்கனவே வேலைப்பார்த்த இடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான கடித நகலையும், தொழிற்கூட்டுறவு அலுவலராக பொறுப்பு ஏற்றுவிட்டு மாவட்ட சமூக நல அலுவலருக்கு அனுப்பிய கடித நகலையும் காண்பித்தார்.
இவர்கள் 2 பேரிடமும் விசாரணை செய்த போலீசார், இருவரும் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு நேரில் வரும்படி கூறிவிட்டு சென்றனர். இதையடுத்து உரிய ஆவணங்களை எடுத்து கொண்டு 2 பேரும் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாவட்ட சமூக அலுவலர் மூலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புவதாக 2 பேரும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தார்.இது தொடர்பாக சங்க உறுப்பினர்கள் கூறுகையில், பணிமாறுதல் செய்யப்பட்ட அலுவலர் திடீரென அலுவலகத்திற்குள் வந்து அமர்ந்து கொண்டார். அவர் ஏற்கனவே 2 சாவிகளை எடுத்து சென்றதால் தைக்கப்பட்ட இலவச சீருடைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனர்.