தஞ்சை மாவட்டம் காவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
புதுப்பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இலவசமாக வேட்டிகளை மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், பள்ளி கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், காவலூர் ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் என்.செந்தில்குமார் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராபியா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் செல்வபாரதிகண்ணன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பொங்கல்விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், ஊராட்சி பணியாளர்கள் புதுப்பானை வைத்து பச்சரிசி பொங்கலிட்டு சாமிக்கு படைத்தனர். பின்னர் அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிராம வருவாய் அலுவலர் தேவி, பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன், ஊராட்சி செயலர் அபிஷா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார் கரும்பு வழங்கினார். இதில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் பங்கேற்றனர்.
இதேபோல் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடைபெற்றது. மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்றார். இதில் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதுப்பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இலவசமாக வேட்டிகளை மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.
தொடர்ந்து பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் காரல் மார்க்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம்: மதுக்கூர் அருகே புலவஞ்சி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தரிசு பாதை நிலம் தனி நபரால் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. இது பற்றி காவி புலிப்படை நிறுவனத் தலைவர் புலவஞ்சி போஸ் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தையும், வருவாய் துறையின் மெத்தனப் போக்கையும் கண்டித்து காவிப்புலிப்படை சார்பில் மதுக்கூர் முக்கூட்டு சாலையில் சாலை மறியல் செய்ய முடிவு செய்திருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதிக் கூட்டம் நடந்தது. இதில் போஸ், அரசு தரிசு நிலத்தை அடைத்திருந்த தனிநபர் இன்ஸ்பெக்டர் துரைராஜ், வருவாய் ஆய்வாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தரிசு நிலத்தை அடைத்த பாதையை திறந்து விட வேண்டும், பொதுமக்களுக்கு அந்த பாதையை சாலையாக அமைத்து தருவது என்று உறுதி கூறியதையொட்டி சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.