(Source: ECI/ABP News/ABP Majha)
அள்ளித்தருது கொய்யா... அட்டகாச வருமானத்தை அரை ஏக்கரில் எடுக்கும் தெற்கு நத்தம் விவசாயி
அரை ஏக்கர்தான் வருமானத்தை அள்ளித்தருகிறது கொய்யா. ரூ.2 முதல் ரூ.2.50 லட்சம் வரை வருமானம் பார்த்து வருகிறார் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெற்கு நத்தம் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாச்சலம்.
தஞ்சாவூர்: அரை ஏக்கர்தான் வருமானத்தை அள்ளித்தருகிறது கொய்யா. இப்படி அசத்தல் கொய்யா சாகுபடி செய்து ஆண்டுக்கு ரூ.2 முதல் ரூ.2.50 லட்சம் வரை வருமானம் பார்த்து வருகிறார் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெற்கு நத்தம் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாச்சலம். இன்றல்ல நேற்றல்ல... கடந்த 5 ஆண்டுகளாக கொய்யா பழ சாகுபடியில்தான் இந்த வருமானத்தை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொய்யா சாகுபடிக்கு மாறிய காலம்
கொய்யா சாகுபடி குறித்து விவசாயி வெங்கடாச்சலம் கூறியதாவது: 5 வருஷத்துக்கு முன்னாடி எல்லாரையும் போல நானும் நெல் சாகுபடிதான் செய்து வந்ததேன். ஆண்டிற்கு 2 போகம் குறுவை, சம்பா என இரண்டு போகம் நெல் சாகுபடி செய்து வந்தேன். நாற்று, உரச்செலவு,களைப்பறித்தல் என அனைத்து செலவுகள் போக அரை ஏக்கர் நிலத்தில் ஒரு போகத்திற்கு ரூ.15 ஆயிரம் லாபம் கிடைப்பதே பெரிசு. அதிலும் கனமழை பெய்தால் அவ்வளவுதான் வந்தால் சாகுபடி பயிர்கள் மூழ்கினால் முழுக்க நஷ்டம்தான். அதை ஈடுகட்ட என்ன செய்தாலும் முடியாது. இதனால்தான் மாற்றுப்பயிர் செய்யலாம் என்று யோசனை ஏற்பட்டுச்சு. நிறைய பேரிடம் ஆலோசனை கேட்டேன். நானும் பல இடங்களுக்கு போய் பார்த்தேன். அப்போ என் மனசுக்கு கொய்யா சாகுபடி செய்யலாம் அப்படின்னு நிறைவா பட்டுச்சு.
அதிக தண்ணீர் தேவைப்படாத கொய்யா சாகுபடி
எதிர்காலத்தை மனதில் வைத்து, அதிகத் தண்ணீர் தேவைப்படாத பயிர்களைத் தேர்வுசெய்து சாகுபடி செய்தால் மட்டுமே, விவசாயம் வில்லங்கமில்லாமல் இருக்கும். அந்த வகையில் குறைந்த தண்ணீரில், வறட்சியைத் தாங்கி வளரும் கொய்யா, சமீபகாலமாக விவசாயிகளுக்கு விருப்பத் தேர்வாக இருக்கிறது. கொய்யாவுக்குக் கிடைக்கும் விலை காரணமாக கொய்யா சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால கொய்யாதான் சரியாக இருக்கும் என்று தெரிஞ்சுக்கிட்டேன்.
இதற்கு மேலும் தாமதம் செய்யக்கூடாதுன்னு கொய்யா சாகுபடியில் இறங்க முடிவெடுத்தேன். நெல் சாகுபடி செய்துக்கிட்டு இருந்ததுனால கொய்யா சாகுபடி பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு களத்தில் இறங்கினேன்.
அரை ஏக்கரில் கொய்யா சாகுபடி தொடக்கம்
என்னோட அரை ஏக்கர் நிலத்தை முதலில் கொய்யா சாகுபடிக்கு தகுந்தார்போல் தயார் செய்யணும். கொய்யா பயிரிட இருக்கும் நிலத்தை இரண்டு முதல் நான்கு முறை வயலை நன்கு உழுது தயார் செய்தேன். ஆரம்பத்திலேயே வயலை நல்லபடியா உழுது பராமரிச்சுட்டா அதுக்கு பிறகு களை எடுக்கிறது மட்டும்தான் வேலையாக இருக்கும். அரை மீட்டர் ஆழம் மற்றும் அகலம் என்ற அளவில் குழிகளை தோண்டி மேல் மண்ணுடன் 20 கிலோ தொழுஉரம் கொண்டு நிரப்பினேன். கொய்யா கன்றுகளை குழியின் நடுவே நட்டு மண்ணால் அணைப்பு கொடுத்து செடிகள் நன்கு வேர் பிடித்து வளர வழி செய்தேன். பருவமழை தொடங்கும் போது நடவு செய்ய வேண்டும்.
நிலத்தோட தன்மை, மண்வளம், நடவுமுறை பொறுத்து நடவு இடைவெளி 6க்கு 6 மி.மீ, அதாவது அரை ஏக்கருக்கு 100 செடிகள் வரை நடலாம். பொதுவா 3.6 மீட்டரில் இருந்து 5.4 மீட்டர் இடைவெளியில் நடணும். இதனால் மரத்தின் பழங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பொதுவாக, கொய்யா மரங்களுக்கு நீர் பாசனம் தேவையில்லை. ஆனால், தொடக்க நிலையில் இளஞ்செடிகளுக்கு ஒரு ஆண்டுக்கு 8 முதல் 10 முறை நீர்ப்பாசனம் அவசியம். முழுமையாக வளர்ந்த மரங்களுக்கு மே, ஜுலை மாதத்தில் வாராவாரம் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.
ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்ததால் லாபம்
அரை ஏக்கரில் 14 அடிக்கு ஒரு கன்று என மொத்தம் 100 கொய்யா கன்றுகளை நட்டேன். அதற்கு முதலில் தொழு உரத்தை போட்டேன். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடுவேன். ஒருமுறை கன்று நட்டால் அந்த மரம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு காய் தரும். முக்கியமாக, எனது கொய்யா தோட்டத்தில் புற்களையே பார்க்க முடியாது. அடிக்கடி களை எடுத்துக் கொண்டே இருப்பேன். கொய்யா சாகுபடியில் இது ரொம்ப ரொம்ப அவசியம். நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் தொழு உரம் போட்டு ஆர்கானிக் முறையில் செய்வது சிறந்தது எனத் தெரிந்து கொண்டு அந்த முறையிலேயே சாகுபடியை மேற்கொண்டு வருகிறேன்.
லக்கோனம் 49 ரகத்தை சேர்ந்த கொய்யா
நான் லக்கோனம் 49 ரகத்தைதான் சாகுபடி செய்து இருக்கேன். இதில் குண்டு மற்றும்,நீண்ட காய் என இரண்டு வகையில் காய்கள் கிடைக்கும். எங்கள் கிராமத்தில் நாங்கள் ஐந்து விவசாயிகள் கொய்யா சாகுபடிக்கு மாறியுள்ளோம். அதில் எல்லோரும் ஒரு ஏக்கர்,அரை ஏக்கர் அளவிலே செய்து வருகிறோம். கொய்யா சாகுபடியைப் பொறுத்தவரையில் இதுவரை எனக்கு நஷ்டம் என்பதே இல்லை. முக்கியமாக சாகுபடி செய்யும் காய்களை வியாபாரிகளிடம் தரமாட்டேன். நேரடியாக நானே விற்பனை செய்யறேன். ஆட்டோவில் எடுத்துக்கிட்டு போய் ஒரத்தநாடு மற்றும் தஞ்சையில் உள்ள சாலை ஓரத்திலேயே கிலோ ரூ.60-க்கு விற்று விடுவேன். நேரடியாக நானே விற்பதால் கிலோவிற்கு எனக்கு ரூ.30 வரை லாபம் கிடைக்கும். அதுவும் ஒரு சில மாதங்களில் கொய்யா அதிகளவில் விற்பனையாகும்.
ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வருமானம் கிடைக்கிறது
சராசரியா ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 50 கிலோ காய் கிடைக்கும். ஒரு கிலோ கொய்யாவுக்கு 30 ரூபாய்க்குக் குறையாம விலை கிடைக்கும். அதிகபட்சமா 60 ரூபாய் வரைக்கும்கூட விற்பனையாகிருக்கு. சில நேரத்தில் இன்னும் கூடுதல் விலை கிடைக்கும் எப்படிக் கூட்டிக்கழிச்சுப் பார்த்தாலும் கிலோவுக்கு 20 ரூபாய் கண்டிப்பாகக் கிடைச்சுடும். அந்தக் கணக்குல வெச்சுக்கிட்டாலே ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அரை ஏக்கருக்குனு பார்த்தா100 மரம் 2 லட்சத்துல இருந்து 2.50 லட்சம் வரைக்கும் கிடைக்கும்.
ஆண்டிற்கு 2 போகம் சாகுபடி
ஆண்டிற்கு இரண்டு போகம் சாகுபடி செய்வேன். அதாவது, மாசி, மற்றும் ஆடி மாதத்தில் கொய்யா அறுவடை துவங்கும், 100 நாள் காய்ப்பிற்கு பிறகு 90 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு அறுவடை செய்வேன். 90 நாளில் ஒரு போகத்திற்கு ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஆண்டிற்கு செலவுகள் போக 1.50 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கும். கொய்யா விற்பனை அதிகம் இருக்கும் நேரத்தில் இது இன்னும் அதிகரிக்கும். அரை ஏக்கரில் நிறைவான லாபம் கிடைப்பதால் தொடர்ந்து கொய்யா சாகுபடியை மட்டுமே செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் மன மகிழ்ச்சியோடு கூறினார்.