தஞ்சை மாவட்டத்தில் 100 குளங்களை மீட்டு சீரமைத்த விவசாயிகளுக்கு நீதிபதிகள் பாராட்டு!
தஞ்சை மாவட்டத்தில் கடைமடைப் பகுதியில் 100 குளங்களை மீட்டு சீரமைத்த விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் சந்தித்து பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) சார்பில், கரிகாலச் சோழமன்னரின் நீர்மேலாண்மை செயலை போற்றும் விழா, கைஃபாவின் 100 வது குளம் சீரமைப்பு பணி நிறைவு விழா, குறுங்காடு துவக்க விழா, சமூக செயற்பாட்டாளர்களுக்கு விருது வழங்கும் விழா, குளம் சீரமைப்பு பணிக்கு பொருளுதவி வழங்கிய தொழிலதிபருக்கு அஞ்சல் தலை வெளியீட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடந்தது.
விழாவுக்கு வந்தவர்களை கைஃபா செயலாளர் கோ.பிரபாகரன் வரவேற்றார். விழாவில் தமிழ்ப் பல்கலைக் கழக துணை வேந்தர் வி.திருவள்ளுவன், முன்னாள் கடலூர் மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன், நீர்வள ஆதாரத்துறை காவிரி கீழ் வடிநிலை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது: ஒரு மன்னரின் முதல் கடமை நீர்மேலாண்மை என சங்கத் தமிழ் கூறுகிறது. நீரின்றி அமையாது என திருவள்ளுவர் பல்வேறு குறள்களில் குறிப்பிட்டு நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார். கம்பன் தனது பாடல்களில் கடவுள் வாழ்த்துக்கு பிறகு, நீருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடல்களை எழுதியுள்ளார்.
இயற்கையை நாம் தவறாக புரிந்து கொண்டோம். இயற்கையும், கடவுளும் ஒன்று தான் என்பதை நமது முன்னோர்கள் புரிந்து வைத்திருந்தனர். குளம் சீரமைத்தவர்களை பாராட்டுவதோடு நிறுத்திவிடாமல் நாமும் அந்த செயலில் ஈடுபட வேண்டும். கைஃபா அமைப்பு 100 குளங்களை சீரமைத்துள்ளது. இதை மேலும் அதிகப்படுத்தி 1,000 குளங்களை இந்த பகுதியில் சீரமைக்க முன் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமார் பேசியதாவது: யாரையும் நம்பி இருக்காமல் இந்த பகுதியில் உள்ளவர்கள் தாமே முன்வந்து தங்களுடைய நீர் நிலைகளை சீரமைக்கத் தொடங்கினர். முதலில் பேராவூரணியில் தொடங்கிய இந்த குளம் சீரமைப்பு என்பது கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய இயக்கமாக விரிவடைந்து தற்போது 100 குளங்களை சீரமைத்துள்ளது என்பது பெரிய காரியம்.
பொட்டல் காடுகள் போன்று காணப்பட்ட இந்த பகுதி தற்போது குளங்களை சீரமைத்ததன் மூலம் பசுமையாக மாறியுள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு தன்னார்வ அமைப்பு வேறு எங்கும் இல்லை. இதுபோன்ற அமைப்புகள் பிற இடங்களிலும் உருவாக வேண்டும். அந்த அளவுக்கு இதன் செயல்பாடுகள் உள்ளது. இதற்கு இந்த பகுதியில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு தான் காரணம். நீர்மேலாண்மை, சுற்றுச்சூழல் போன்ற அமைப்புகளில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சமுதாயத்தை பாதுகாக்க முன் வர வேண்டும் என்றார்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரும் நீதிபதியுமான வி.பாரதிதாசன் பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நீர்மேலாண்மைக்கு வித்திட்ட பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸை மறந்து விட்டனர். அவர் இல்லையென்றால் கடைமடைப்பகுதிக்கு தண்ணீர் கிடைத்திருக்காது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள், நீர் நிலைகளை அழிவின் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்றார்.
விழாவில் கைஃபா அமைப்பு நிர்வாகிகளுக்கு நீதிபதிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். கைஃபா அமைப்புக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் பொருளுதவி வழங்கிய ஈரோடு தொழிலதிபர் டி.சதிஷ்குமாருக்கு, கைஃபா சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டப்பட்டு, அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை கைஃபா தலைவர் கார்த்திகேயன் தலைமையில், அந்த குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக ஆவணத்தில் 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுகுளத்தில் 7 இடங்களில் குறுங்காடு அமைக்கும் பணியை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்.