நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து - அலறியடித்து ஓடிய மக்களால் பரபரப்பு
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து. அதிகாரிகள், குறைதீர் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திங்கள்கிழமையான நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளிப்பதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி ஏராளமான மாற்றுத்திறனாளிகள் குவிந்திருந்தனர். இந்த நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாவது தளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் பொருட்கள் பாதுகாப்பு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ மளமளவென அறை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தீ விபத்தை பார்த்தவுடன் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்பட்டு, அலுவலக தரைத்தளம் உள்ளிட்ட மூன்று தளங்களில் இருந்த அனைவரும் பாதுகாப்பு கருதி அலுவலகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர். விரைந்து வந்து நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். தீ விபத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் அலுவலக சேமிப்பு கிடங்கு அறையில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த சுமார் 5000 செட்டாப் பாக்ஸ் கருவிகள் பெரும்பாலானவை எரிந்து நாசமானது. இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட காரணத்தால் அங்கு நடைபெற இருந்த மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்தின் தீ விபத்து காரணமாக வெளிப்பாளையம், நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் உடனடியாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அலுவலகத்தை பூட்டிவிட்டு ஓடிய அதிகாரிகளும், மனு அளிக்கவந்த பொதுமக்களும் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்