தஞ்சாவூர், பேராவூரணியில் சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி பணி முகாம்
உலக வெறிநோய் தினத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி வடக்கு வாசல் ராஜா கோரி பகுதியில் வெறி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

தஞ்சாவூர்: உலக வெறி நோய் தினத்தை ஒட்டி தஞ்சாவூரில் சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி பணி முகாம் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறிநோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை ஒட்டி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 105 கால்நடை மருந்தகங்கள், 7 கால்நடை மருத்துவமனைகள், ஒரு கால்நடை பெரு மருத்துவமனை மற்றும் ஒரு கால்நடை பன்முக மருத்துவமனை ஆகியவற்றில் காலை 8 மணி முதல் 12 மணி வரை மேற்கொள்ளப்படும் இலவச சிறப்பு வெறி நோய் தடுப்பூசி பணி முகாமில் 3 மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய தங்களுடைய நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை, பிராணிகள் வதை தடுப்பு சங்கம் (SPCA) தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் மிஷன் ரேபிஸ், கோவா இணைந்து ரேபிஸ் இல்லா தஞ்சாவூர் உருவாக்க, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி மேற்கொள்ளும் திட்டமானது கடந்த 19.05.2025 அன்று தொடங்கப்பட்டு தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் நாளது தேதி வரை 750 சமுதாய மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சியை தொடர்ந்து, கும்பகோணம் மாநகராட்சி நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என படிப்படியாக மாவட்டம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்த உள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு தங்களது முழு ஒத்துழைப்பையும் நல்கிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஒட்டி உலக வெறிநோய் தினத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி வடக்கு வாசல் ராஜா கோரி பகுதியில் வெறி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த உலக வெறிநோய் தின நிகழ்வில் மாநகர் நல அலுவலர் மருத்துவர் நமச்சிவாயம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மருத்துவர் பாஸ்கரன், உதவி இயக்குனர் மருத்துவர் சரவணன், மருத்துவர் ஏஞ்சலா சொர்ணமதி, பிராணிகள் வதை தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார், மருத்துவர் ஜனனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பேராவூரணியில் ரோட்டரி சங்கம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் அரசு கால்நடை மருத்துவமனையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் சிவ.சதீஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் கே.எஸ்.நீலகண்டன் வரவேற்றார். ரோட்டரி மண்டல துணை ஆளுநர் கே.ராமதாஸ் முகாமைத் துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.
கால்நடை மருத்துவர் சா.வீரமணி தலைமையில், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் க.இந்திராணி, உதவியாளர் அமிர்தவள்ளி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில், ரோட்டரி சங்க மருத்துவ திட்ட முகாம் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணா, ரோட்டரி சங்க நிர்வாகிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, பொருளாளர் பி.சுரேஷ் நன்றி கூறினார். முகாமில், 220 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.





















