தஞ்சாவூர்: மூடப்பட்ட மேட்டூர் அணை - காயும் சம்பா நெற்பயிர்கள்
மேட்டூர் அணை மூடப்பட்டதால் கல்லணை கால்வாயில் தண்ணீர் வருவதும் நின்றுவிட்டது. இதனால், இப்பகுதிகளில் சம்பா, தாளடி பருவ நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன.
மேட்டூர் அணை வழக்கம்போல ஜனவரி 28ஆம் தேதி மூடப்பட்டது என்றாலும், டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பின்பட்ட சம்பா, தாளடி சாகுபடி நடைபெறுகிறது. கடந்த ஜனவரி மாதம் விதை தெளித்து, நாற்றுக்களை பறித்து வயல்களில் நடவு செய்துள்ளனர். இவற்றில் பெரும்பாலும் அறுவடைக்கு தயாராகிவரும் நிலையில் உள்ளன.
இந்நிலையில், தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி, வண்ணாரப்பேட்டை, சித்திரக்குடி, ஆலக்குடி உள்பட பல்வேறு கிராமங்களில் கல்லணை கால்வாய் தண்ணீரை நம்பி பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பயிர்கள் கதிர் விட்டு, 20 நாள்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. மேட்டூர் அணை மூடப்பட்டதால் கல்லணைக் கால்வாயில் தண்ணீர் வருவதும் நின்றுவிட்டது. இதனால், இப்பகுதிகளில் சம்பா, தாளடி பருவ நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “ஏற்கனவே நவம்பர் மாதத்தில் பெய்த தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து மீண்டு வந்து மறு நடவு செய்தோம். நடவு செய்யப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் அனைத்தும் பால் பருவம் எனும் சூல் பருவத்தில் இருப்பதால், பெரும்பாலான பயிர்கள் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளன.
விவசாயிகள் கல்லணை கால்வாய் தண்ணீரை நம்பி சாகுபடி செய்துள்ள இந்த நேரத்தில் மேட்டூர் அணை மூடப்பட்டதால், தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்துவருகின்றன. இதனால், கதிர்களில் உள்ள நெல் மணிகள் வீணாகிவிடும் அபாய நிலை உள்ளது. தற்போது தண்ணீர் இல்லாததால், சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்களை என்ன செய்வது என தெரியவில்லை.
மின் மோட்டார், இலவச மோட்டார் வைத்திருப்பவர்களிடம் வாடகைக்கு தண்ணீர் வாங்கி நெற்பயிருக்கு பாய்ச்சினாலும், அவர்களுக்கு தண்ணீர் தேவை என்பதால், வயல்களில் தண்ணீர் விடுவது சிரமமாகியுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால், சில மோட்டார்களில் தண்ணீர் சொற்ப அளவில்தான் வருகிறது.
சம்பா, தாளடி பயிர்களை சாகுபடி செய்வதற்காக நகைகளை அடகு வைத்தும், வெளியில் கடன்களை வாங்கியம் சாகுபடி செய்துள்ள நிலையில், போதுமான தண்ணீர் இல்லாததால், அனைத்தும் வீணாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலையை உணர்ந்து மேட்டூர் அணையை 15 நாள்களுக்கு திறந்து, கல்லணைக் கால்வாயில் தண்ணீர் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் பல நுாற்றுக்கணகாகன ஏக்கரில் சாகுபடிசெய்த நெற்பயிர்களின் நிலை கேள்வி குறியாகும்” என்றனர்