டித்வா புயலால் ரெட் அலார்ட்... தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்த பேரிடர் மீட்புக்குழுவினர்
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை (நவ.28) அதி மழைக்கான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: டித்வா புயலை எதிர்கொள்ளும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பேரிடர் மீட்பு குழுவினர் உபகரணங்களுடன் வருகை புரிந்தனர்.
இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று 'டிட்வா' புயலாக நேற்று வியாழக்கிழமை உருவானது. இந்தப் புயல் வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை (நவ.28) அதி மழைக்கான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நேற்று வியாழக்கிழமை அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் டிட்வா புயலாக வலுப்பெற்றது.
இதைத் தொடர்ந்து, வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால், தென்தமிழகத்தில் அனேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று 28ம் தேதி முதல் டிச. 3-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் 7 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் டிட்வா புயல், தற்போது புதுவையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 440 கி.மீ.தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு- தென்கிழக்கே 540 கி.மீ. தொலைவிலும் நகர்ந்து வருகிறது. இது ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) அதிகாலை வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதையொட்டிய தெற்கு ஆந்திரம் கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களுக்கு டித்வா புயலால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயலையும், மழை வெள்ளத்தையும் எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர் .
தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் சென்னை ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதில் ஐந்து குழுவினர் திருவள்ளூர், கடலூர், வேளாங்கண்ணி, தூத்துக்குடி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாகவும், டித்வா புயல் எச்சரிக்கை காரணமாகவும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வேளாங்கண்ணியில் முகாமிட்டுள்ள 90 வீரர்களும் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு, இதில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 30 குழுவினர் நாகை மாவட்டத்திலும், உதவி ஆய்வாளர் அனுசியா தலைமையில் 30 வீரர்கள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும், உதவி ஆய்வாளர் மல்லிகா தலைமையில் திருவாரூர் மாவட்டத்திற்கு 30 வீரர்களும் மீட்பு குழு பணிக்கு ஈடுபடுத்துவதற்காக வருகை தந்துள்ளனர்.
இதையடுத்து தஞ்சாவூர் வருகை தந்துள்ள இந்த குழுவினர் தயார் நிலையில் மீட்பு பணிகளுக்கு தேவையான இயந்திரங்கள், கருவிகள், பாதுகாப்பு பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் அனுசுயா கூறியதாவது: தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு சார்பில் வேளாங்கண்ணியில் கடந்த மூன்று மாதங்களாக முகாமிட்டுள்ளோம். தற்போது புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எடுக்கப்பட்டுள்ளதால் இதில் எனது தலைமையில் 30 பேர் கொண்ட வீரர்கள் தயார் நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளோம். மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி மீட்பு குழு பணியில் செயல்பட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






















