ஈரப்பதத்தை பெரியதாக கணக்கில் எடுத்து கொள்ளாமல் கொள்முதல் செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
’’மழைக்காலம் என்பதால் நெல் ஈரப்பதத்துடன் தான் இருக்கும்; நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என விவசாயிகள் நெல்லை புறக்கணிக்க கூடாது’’
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூரில் 1969ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி ஒக்கநாடு கீழையூர், காரப்பட்டு, கீழவன்னிப்பட்டு , கருவாக்குறிச்சி, பேரையூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 2500 ஏக்கர்கள் விவசாயம் செய்வதற்கு அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் சாதிக்பாட்சா, ஒரத்தநாடு முன்னாள் எம்.எல்.ஏ. எல்.கணேசன் ஆகியோரின் பரிந்துரையின்படி அப்போதைய முதல்வர் கருணாநிதி இறவை பாசன நீரேற்று நிலையம் திறக்கப்பட்டது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல், ஆட்சி மாற்றத்தாலும், அதிகாரிகளின் அலட்சியத்தால், இறவை பாசன நீரேற்று நிலையம் சரியான பராமரிப்பின்றி பழுதடைந்து உள்ளதால். அப்பகுதி பொதுமக்கள் விவசாயம் செய்வதில் பெரிதும் பாதித்து உள்ளனர். இதனால் தண்ணீர் இல்லாமல் பல வருடங்களாக விவசாயிகள் பாதிப்புக்குள்ளானார்கள். இது குறித்து தமிழக அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும், கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர். இந்நிலையில் ஒக்கநாடு கீழையூர் கிராமத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறுகையில்,
சுமார் 2500 ஏக்கருக்கு மேல் பாசனம் பெறும் இறவை நீரூற்று நிலையத்தை தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு சீரமைக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள வாரிகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவற்றை சீரமைத்து தரவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்ட இந்த இறவை பாசன நீரேற்று நிலையத்தை உடனடியாக சீரமைக்க தற்போதைய முதல்வர் முக.ஸ்டாலின், நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முதல்வரையும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனனையும் சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளோம்.
மேலும், மத்திய அரசு, அதிகாரிகள், ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்தது வரவேற்கத்தக்கது. தமிழக முதல்வர் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மூலம் நேரடியாக ஆய்வு செய்து வருவதாகவும் உடனடியாக விவசாயிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது மழைக்காலம் என்பதால் நெல் ஈரப்பதத்துடன் தான் இருக்கும்; நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என விவசாயிகள் நெல்லை புறக்கணிக்க கூடாது.
விவசாயிகள் நெல்லை காய வைப்பதற்கு இயற்கை ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஆகவே ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இதை கிடப்பில் போடாமல் உடனடியாக மத்திய அரசிடம் வழங்கி நெல்லை விவசாயிகளிடமிருந்து ஈரப்பதத்தை பெரிதாக கணக்கில் எடுக்காமல் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றார். இந்த ஆய்வின் போது ஒரத்தநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், ஊராட்சிமன்ற தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.