கும்பகோணத்தில் வரும் 25ம் தேதி தபால் சேவை குறைதீர் முகாம்; புகார் மனுக்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வருகிற 25- ந் தேதி காலை 11 மணியளவில் தபால் சேவை குறைதீர்ப்பு முகாமும், 12 மணிக்கு ஓய்வூதியதாரர் குறைதீர்ப்பு முகாமும் நடக்கிறது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வருகிற 25- ந் தேதி காலை 11 மணியளவில் தபால் சேவை குறைதீர்ப்பு முகாமும், 12 மணிக்கு ஓய்வூதியதாரர் குறைதீர்ப்பு முகாமும் நடக்கிறது.
இதுகுறித்து கும்பகோணம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.:-
தபால் சேவை, ஓய்வூதியர் குறைதீர்ப்பு முகாம்
கும்பகோணம் கோட்ட அளவிலான தபால் சேவை மற்றும் ஓய்வூதியதாரர் குறை தீர்ப்பு முகாம் கும்பகோணம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு குறிப்பிட்ட நாட்களில் நடந்து வருகிறது. அதன்படி வருகிற 25- ந் தேதி காலை 11 மணியளவில் தபால் சேவை குறைதீர்ப்பு முகாமும், 12 மணிக்கு ஓய்வூதியதாரர் குறைதீர்ப்பு முகாமும் நடக்கிறது.
புகார் மனுக்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்
குறைதீர்ப்பு முகாமிற்கு புகார்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற 18- ந் தேதி ஆகும். தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்டதேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின்முகவரி, ரசீதுஎண், பணவிடை (மணியார்டர்), துரிததபால், பதிவுதபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்கவேண்டும்.
முழுமையான விபரங்கள் இணைக்க வேண்டும்
புகாரானது சேமிப்புவங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு சம்பந்தமாக இருப்பின், கணக்குஎண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பணம்கட்டிய முழுவிவரம், பணம்செலுத்திய அலுவலகத்தின் பெயர், ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த புகார் மனுக்களை தபால் சேவை மற்றும் ஓய்வூதியதார குறை தீர்ப்பு முகாம், கும்பகோணம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் என்ற முகவரிக்கும், dokumbakonam.tn@indiapost.gov.in என்ற இணையதளம் முகவரியிலும் தெரிவிக்கலாம்.
நேரில் அல்லது செயலிள் வாயிலாக பங்கேற்கலாம்
மேலும், தபால் உறையின் மீது முன்பக்க மேல்பகுதியில் “தபால் சேவை மற்றும் ஓய்வூதியதாரர் குறை தீர்ப்பு முகாம்” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். குறை தீர்ப்பு முகாமில் தாங்கள் நேரிலோ அல்லது செயலிகள் மூலமாகவோ உங்கள் வசதிக்கேற்ப பங்கேற்கலாம். எனவே தங்களின் தற்போதைய வீட்டு முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அருகில் இருக்கும் அஞ்சலக முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு தபால்களை மேற்கூறிய முகவரிக்கு புகார் மனுக்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.