பழமை மாறாமல் புதுப்பொலிவு பெற உள்ள திருச்சி பெரியார் கல்லூரி: தமிழக அரசு ரூ.6.2 கோடி நிதி ஒதுக்கீடு
சுமார் 70 ஆண்டுகள் பழமையான இந்த கல்லூரியில், திருச்சி எம்.பி., சிவா உட்பட பலர் கல்வி பயின்றுள்ளனர். ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது இந்த கல்லூரி,

தஞ்சாவூர்: திருச்சி பெரியார் கல்லூரி பழமை மாறாமல் புனரமைப்பு ரூ.6.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த கல்லூரி புதுப்பொலிவு பெற உள்ளது.
திருச்சியில் உள்ள பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 1965ம் ஆண்டு பெரியார் வழங்கிய நிதியிலிருந்து வாங்கப்பட்ட நிலங்கள் மற்றும் கட்டிடங்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. சுமார் 70 ஆண்டுகள் பழமையான இந்த கல்லூரியில், திருச்சி எம்.பி., சிவா உட்பட பலர் கல்வி பயின்றுள்ளனர். ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த கல்லூரி, தற்போது 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
இந்நிலையில் 6.2 கோடி ரூபாய் மதிப்பில், திருச்சி பெரியார் அரசு கலைக் கல்லூரி பழமை மாறாமல் புனரமைக்கப்பட உள்ளது. ஜாதிக்காய், சுண்ணாம்பு போன்ற பாரம்பரியப் பொருட்களைக் கொண்டு இந்த பணிகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், எம்.பி.யுமான திருச்சி சிவா, முதல்வர், துணை முதல்வர் இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பாரம்பரியமிக்க இரண்டு கட்டிடங்களை ரூ. 6.2 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்ட திருச்சி எம்.பி., சிவா புனரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த கல்லூரியில் உள்ள பழமை வாய்ந்த இரண்டு கட்டிடங்கள், அதாவது லங்கா கட்டிடம் மற்றும் டக்கோயா கட்டிடம், பெரியார் சட்டப் போராட்டம் நடத்தி நிலைநிறுத்தியவை. திருச்சி எம்.பி., சிவா இந்த கட்டிடங்களில்தான் பி.ஏ மற்றும் எம்.ஏ படித்தார். மேலும், மிசா சட்டத்தின் கீழ் கைதாகி, தேர்வு எழுதியதும் இங்குதான். நீண்டகாலமாக பயன்பாட்டில் இல்லாத இந்த கட்டிடங்களை இடிக்கும் நிலையில் இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு புனரமைப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்வதை அறிந்த திருச்சி எம்.பி., சிவா எம்.பி, தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ரூ. 6.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கு முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் தனது மனமார்ந்த நன்றியை எம்.பி., சிவா தெரிவித்துள்ளார். தற்போது கட்டிடப் பணிகள் தொடங்குவதற்கான தொடக்க விழா நடைபெற்றுள்ளது.
இந்த கட்டிடங்களை புதுப்பிக்க, ஜாதிக்காய், சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி, தயிர், பழங்காலத்து செங்கற்கள் போன்ற பாரம்பரியப் பொருட்களைப் பயன்படுத்தி, கட்டிடங்களின் பழமை மாறாமல் புனரமைப்பு பணிகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். இந்த புனரமைப்பு பணிகள் மூலம், கல்லூரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் மீண்டும் புதுப்பொலிவு பெறும்.






















