ஆட்சி நடத்த முடியாவிட்டால் எங்களிடம் தந்துவிடுங்கள்- முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காட்டம்..!
கடன் வாங்தாத அரசு இல்லை, ஆட்சி நடத்த முடியாவிட்டால் அதிமுகவிடம் ஆட்சியை ஓப்படைத்துவிட்டு செல்லுங்கள் என மயிலாடுதுறையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அதிமுக கட்சி அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அரசு தன்னுடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு வெள்ளைஅறிக்கை தாக்கல் செய்கிறது என்றால் பானையில் இல்லை அகப்பையில் வரவில்லை என்று சொல்வதற்காகத்தான் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடன்பெற்றுதான் ஆட்சி நடத்துகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். பல்வேறு இயற்கை இடர்பாடுகள் சந்திக்கும் போது மக்களை சிக்கலில் இருந்து விடுவிக்க வேண்டும், மக்கள் மகிழ்ச்சியோடு, இன்னல்கள் இல்லாமல் வாழவேண்டும் அதற்கு அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்துகிறது. அதற்கு நிதிதேவை. நிதிஇல்லாதபோது கடன்வாங்கி ஆட்சி நடத்துகிறோம். கடன்வாங்காத அரசு நாட்டில் எங்கே இருக்கிறது. வெள்ளை அறிக்கை தாக்கல் செய்கிறோம். கடன் அவ்வளவு இருக்கு, இவ்வளவு இருக்கிறது என்று சொல்லும் திமுக, நாங்கள் ஆட்சி நடத்தவிரும்பவில்லை அவர்களே ஆட்சி நடத்தட்டும் என்று கூறவேண்டியதுதானே. ஆட்சிக்குவந்தவர்கள் இருப்பதை வைத்து ஆட்சி நடத்தவேண்டும். அதிமுக மீது சுமையை சுமத்துவது இது வேண்டாத ஒன்று அவசியமற்றது. இது மற்றவர்களை ஏளனம் செய்ய வேண்டும் என்பதற்காக கூறுவது.
திமுக கெட்டிக்காரத்தனமாக ஆட்சிநடத்த வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடக்கிறது. அச்சுறுத்தி, மிரட்டி முடக்கி போட இது போன்ற செயல்களில் திமுக ஈடுபடுகிறது. அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. ஆளும்கட்சி, எதிர்கட்சி என்று மாறிமாறி பார்த்திருக்கிறோம். அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வகையில் திமுக செயல்பாடுகள் இருக்கிறது. இதனை அதிமுகவில் உள்ள அனைவரும் நிமிர்ந்து நின்று சந்திப்பார்கள். வேளாண் பட்ஜெட் வரட்டும் அதுவும் வெள்ளையாக இருக்கிறதா, பச்சையாக இருக்கிறதா என்பதை பார்ப்போம். கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணைகட்டுவது என்பது நடத்த முடியாத ஒன்று. பல்வேறு சட்டபாதுகாப்புகள் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்க முடியாது. நீதிமன்றத்தில் இருக்கிறது, சட்டபாதுகாப்பை ஜெயலலிதா பெற்றுதந்திருக்கிறார்கள். பேசுவார்களே தவிர கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்றதொகுதிகளில் அதிமுகவை வெற்றிபெறசெய்தவர் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அந்தகோபம் முதல்வருக்கு அதிகமாக இருப்பதால் அரசியல் தாக்குதல் நடத்துகிறார்கள்.
வேலுமணி டெண்டர் விட்டதில் முறைகேடு என்று செய்திகள் வெளியாகி வருகிறது. டெண்டரில் மிகப்பெரிய ஒரு முறைகேட்டை, சட்டவிரோத நடவடிக்கையை நடைமுறைப்படுத்தி காட்டியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. வீராணம் டெண்டர் வைத்தபோது அவர்நினைத்தவரால் டெண்டர் எடுக்க முடியவில்லை என்பதால் டெண்டர் கொடுத்த 5 நாட்களில் டெண்டர் தொகையை குறைத்து கொடுத்தார்கள். அதில் இன்னும் பல்வேறு முறைகேடுகள் உள்ளது.