தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தரவுகளைப் பதிவேற்றம் செய்வதற்கான வாகனம் அறிமுகம்
தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன், தரவுகளைப் பதிவேற்றம் செய்வதை விரைவுபடுத்துவதற்கு இந்த வாகனம் உதவியாக இருக்கும். மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களிலும் இந்த வாகனம் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
![தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தரவுகளைப் பதிவேற்றம் செய்வதற்கான வாகனம் அறிமுகம் New vehicle was inaugrated by Thanjavur district collector for updating Corona vaccine data தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தரவுகளைப் பதிவேற்றம் செய்வதற்கான வாகனம் அறிமுகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/22/c7ec5c3590d7313f7fb1d193301f38cf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தரவுகளைப் பதிவேற்றம் செய்வதற்கான வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. ரெடிங்டன் பவுண்டேஷன் சார்பில் கொரோனா தடுப்பூசி குறித்த விவரங்களை கோவின் இணைய முகப்பில் பதிவேற்றம் செய்வதற்காக எண்மப் (டிஜிட்டல்) பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்தை தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்தில் கொரோனா தொடர்பான தரவுகளைப் பதிவேற்றம் செய்யும் பணியை விரைவுபடுத்துவதற்கு உதவியாக இந்த வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 20 கணினிகள், வைபை வசதி உள்ளிட்டவை உள்ளன. தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன், தரவுகளைப் பதிவேற்றம் செய்வதை விரைவுபடுத்துவதற்கு இந்த வாகனம் உதவியாக இருக்கும். மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களிலும் இந்த வாகனம் செல்ல ஏற்பாடு செய்யப்படும். தொடர்புடைய ஒன்றியத்தில் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தப்பட்டு, நிலுவையில் இருந்தாலும் பதிவேற்றம் செய்யப்படும். புதிதாகத் தடுப்பூசி செலுத்துவோருக்கும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் 3,500 படுக்கைகளை ஏற்கெனவே தயார் நிலையில் வைத்துள்ளோம். மேலும், 25 சதவீத அளவிலான படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த முறை ஆக்ஸிஜன் வசதிக்கு சிரமம் இருக்காது. தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பூதலூர் ஆகிய இடங்களில் ஆக்ஸிஜன் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த முறை ஆக்ஸிஜன் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. இந்த முறை உயிரிழப்பு குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக தடுப்பூசி போட்டவர்களுக்கு இறப்பு இல்லை. கொரோனா பரிசோதனை அளவுக் குறைக்கப்படவில்லை. நாள்தோறும் 2,500 க்கும் அதிகமானோருக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது.அனைத்து வகையிலும் மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது. இதேபோல, பொதுமக்களும் கொரோனா வருவதை முன்கூட்டியே தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
தஞ்சை மாநகரில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை உரிய காலத்தில் தரமாக முடிக்கும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகத்தைப் பழைமை மாறாமல் புதுப்பித்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும், இந்த வளாகத்தில் குழந்தைகள் விளையாடும் வகையில் பூங்கா, 7 டி திரையரங்கம், பறவைகள் உட்காருவதற்கான வசதி போன்றவையும் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்த இடத்தைச் சுற்றுலா தலம் என்ற வகையில் பொதுமக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. மாநகரில் நடைபெறும் ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்கும் பணிக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் என்றார்.அப்போது, மாநகராட்சி ஆணையர் க. சரவணகுமார், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டப் பொருளாளர் எஸ். முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)