தஞ்சாவூரில் 40 நாட்களில் எம்.பி., அலுவலகம் திறக்கப்படும்: எம்.பி., முரசொலி திட்டவட்டம்
தஞ்சாவூர் தொகுதியில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகள், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் ரயில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தர முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மக்களவைத் தொகுதி அலுவலகம் 40 நாட்களில் திறக்கப்படும் என்று எம்.பி. முரசொலி திட்டவட்டமாக தெரிவித்தார்.
மக்கள் குறைகள் தீர்க்க எம்.பி., அலுவலகம்
இதுகுறித்து அவர் தஞ்சாவூரில் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, தஞ்சாவூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில், அவர்களின் குறைகளைக் கேட்டு, தீர்வு காண தஞ்சாவூரில் 40 நாட்களில் மக்களவைத் தொகுதி அலுவலகம் அமைக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலை போக்க புதிய பாலம்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை மேம்பாலத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளதால், அதற்கு தீர்வு காணும் வகையில் தஞ்சாவூர் சரக டிஐஜி அலுவலக பகுதியில் இருந்து டெம்பிள் டவர் பகுதியை இணைக்கும் விதமாக புதியபாலம் அமைக்கத் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் மேம்பாலம் மற்றும் பெரிய கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலம்
தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் மேம்பாலத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை இணைக்கும் விதமாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
யூனியன் கிளப்பில் புத்தகப்பூங்கா
பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பாரம்பரியமான யூனியன் கிளப்பில் மதுரையில் உள்ளதைப் போன்று, போட்டித் தேர்வர்களுக்கு பயன்தரும் வகையில் புத்தகப் பூங்கா அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். தஞ்சாவூர் தொகுதியில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகள், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் ரயில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தர முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.