குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 589 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்: குடிநீர் இணைப்பில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சை கலெக்டர் ரேவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவையான அளவில் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், வீட்டு குடிநீர் இணைப்புகளில் சட்டவிரோதமாக மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரேவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 589 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக மாவட்டம் முழுவதும் 4,941 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் 3,040 சிறிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் கூடுதலாக 283 கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் வழியாகவும் குடிநீர் விநியோகம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த அனைத்து கட்டமைப்பு வசதிகளின் மூலம் குடிநீர் சீராக வழங்கப்பட்டு வந்தாலும், சில பகுதிகளில் குடிநீர் முறையாக கிடைக்கவில்லை என்ற புகார்கள் தொடர்ந்து பெறப்பட்டு வந்தன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில், சிலர் தங்களது வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி, பொதுக் குடிநீர் குழாய்களில் இருந்து அதிக அளவு தண்ணீரை உறிஞ்சி எடுப்பது கண்டறியப்பட்டதாக கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.
இந்தச் செயலால், அருகிலுள்ள மற்ற வீடுகளுக்கு செல்ல வேண்டிய குடிநீர் அழுத்தம் குறைந்து, பல குடும்பங்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது. அரசு போதுமான அளவு தண்ணீர் வழங்கினாலும், சிலரின் சட்டவிரோத நடவடிக்கையால் மற்ற பொதுமக்களின் உரிமை பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வீட்டு குடிநீர் இணைப்புகளில் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவது குடிநீர் விநியோக விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது மட்டுமல்லாமல், அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது.
எனவே, இனி இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மோட்டார்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். மேலும், விதிமீறலில் ஈடுபடுவோர் மீது சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் சமமாக குடிநீர் பெறுவது அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதால், வீட்டு இணைப்புகளில் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சும் செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், குடிநீர் விநியோகம் சீராக நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் ரேவதி கேட்டுக் கொண்டுள்ளார்.
குடிநீர் என்பது அனைவருக்கும் சமமான அடிப்படை உரிமை என்பதால், சிலரின் விதிமீறல் காரணமாக மற்றவர்கள் பாதிக்கப்படாத வகையில், பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குடிநீர் சரிவர வரவில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த நிலையில் மாவட்ட கலெக்டர் ரேவதி ஆய்வுகள் மேற்கொண்டு குடிநீர் குழாயில் மோட்டார்கள் பொறுத்தி தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
ட்ரெண்டிங் செய்திகள்






















