மயிலாடுதுறை : தொகுப்பு வீடு இடிந்து தாய், மகள் படுகாயம்.. வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள்..
மயிலாடுதுறை அருகே தொகுப்பு வீட்டின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் , மகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா மல்லியம் கிராமத்தில் இந்திரா நகர், நாகராஜ் நகர், கீழத்தெரு, குச்சிபாளையம் வீர மேட்டுத்தெரு, மஞ்சவாய்க்கால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தும் பழுதடைந்துள்ளது. கான்கிரீட் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து வருவதால் தொகுப்பு வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், இந்திரா நகரில் தொகுப்பு வீட்டில் வசிக்கும் மாதவன் என்பவர் கூலி வேலைக்கு வெளியூர் சென்றிருந்த நிலையில் மாதவனின் 30 வயதான மனைவி அனிதா, 9 வயதான மகள்கள் மாதஸ்ரீ 5 வயதான லட்சிதா மற்றும் உறவினர் 70 வயதான அகிலாண்டம் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அதிகாலை தொகுப்பு வீட்டின் கான்கிரிட் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த அனிதா 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகள் மாதஸ்ரீடிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஏராளமான தொகுப்பு வீடுகள் கடந்த பல ஆண்டுகளாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், இதில் வாழும் ஏழை மக்கள் உயிர் பயத்துடன், எப்பொழுது வேண்டுமானாலும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள அவர்கள், சிலர் தங்களால் முடிந்த பணம் செலவு செய்து மராமத்து பணி மேற்கொண்டு வசித்து வருவதாகவும், பலர் அன்றாட வாழ்க்கைக்கே வருவாய் இல்லாத சூழலில் வீடுகளை சரி செய்ய முடியாத தவித்து வருவதாகவும், இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் வீடு இடிந்து உயிர்சேதம் போன்ற பெரும் விபத்து ஏற்படும் முன்பு உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தொகுப்பு வீடுகளை மறுசீரமைப்பு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற