(Source: ECI/ABP News/ABP Majha)
ITR Filing Last Date: இன்றே கடைசி நாள்.. வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா? தெரிந்துகொள்ளவேண்டியது இதுதான்..
இம்முறை ஜூலை 31-ம் தேதி அதாவது இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரு வருடங்களை போல இந்த வருடம் கூடுதல் கால அவகாசம் எதுவும் கிடையாது என்று மத்திய அரசும் திட்டவட்டமாக சொல்லிவிட்டது.
இன்று வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், 5000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. தேதி நீட்டிப்பிற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல்
மாத ஊதியம் பெறுவோர், தொழில் முனைவோர், வருடத்துக்கு ஒருமுறை வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கமான விதி. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதி ஆண்டுக்கான வரி விவரங்களை ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
வரி விதிப்பு முறை
ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் மேல் பெறுபவர்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரிக்கணக்கிற்கு, கூடுதல் வரி எதுவும் கிடையாது. 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானம் இருந்தால் கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. முன்னதாகவே வருமான வரி தாக்கல் செய்து விட்டால், அவர்களுக்கு சலுகைகளும் உண்டு.
காலக்கெடு நீட்டிப்பு இல்லை
இந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் கடந்த 2 வருடங்களாகவே மிகவும் தீவிரமாக இருந்தது. தொடர்ச்சியாக ஊரடங்கு அமலில் இருந்தது. அதனால் அந்த நேரத்தில் வருமான வரித் தாக்கல் செய்ய, டிசம்பர் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்படடு இருந்தது. அந்தவகையில், 2021 - 2022 ஆம் நிதி ஆண்டுக்கான வருமானம் வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று பலர் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் இம்முறை ஜூலை 31-ம் தேதி அதாவது இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரு வருடங்களை போல இந்த வருடம் கூடுதல் கால அவகாசம் எதுவும் கிடையாது என்று மத்திய அரசும் திட்டவட்டமாக சொல்லிவிட்டது.
அபராத கட்டணம்
கடைசி தேதியை தவறவிட்டால், மறுநாள் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் வருமான வரிக்கணக்குகளுக்கு தாமத கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி வரை, ரூ.3.4. கோடிக்கும் அதிகமாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், கடந்த 26 ஆம் தேதி மட்டும் முப்பது லட்சம் ரூபாய் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் அளித்துள்ளது. தாமதமாக வருமான வரி தாக்கல் செய்தால் 5 லட்சத்திற்கும் குறைவான வருமான வரிக்கணக்கிற்கு 1000 ரூபாய் அபராதமும், 5 லட்சத்திற்கும் அதிகமான வருமான வரிக்கணக்கிற்கு 5000 ரூபாயும் அபராதமாக வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதியை தவறவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அபராத கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவும் வரி செலுத்துவோருக்கு மெசேஜ்கள் மற்றும் மெயில்கள் மூலம் வருமான வரித்துறை நினைவூட்டி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்