காவல்நிலையம் முன் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி - குருங்குளம் கரும்பு ஆலை மீது புகார்
’’8 மாதத்திற்கு முன்பு, கரும்பு வெட்டிய கூலியான 1,38,863 தொகையை வழங்காமல், ஆலை நிர்வாகம் இருந்து வந்தது’’
பண்ருட்டியை அடுத்த அழகுநத்தம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (50). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சரவணன், வருடந்தோறும் ஆலை கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியாக இருந்து வருகின்றார். தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளத்திலுள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ், பயிரிடப்படும் ஆலை கரும்புகளை, வளர்ந்த பின் வெட்டும் வேலைக்கு பல வருடங்களாக இருந்து வருகிறார். இதற்காக, அப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோரை, குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு வந்த தங்க வைத்து, உணவு வழங்கி, ஆலை நிர்வாகம் கூறும் கிராமங்களுக்கு சென்று கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுத்தி, இவர்களுக்கு கண்காணிப்பாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 8 மாதத்திற்கு முன்பு, கரும்பு வெட்டிய கூலியான 1,38,863 தொகையை வழங்காமல், ஆலை நிர்வாகம் இருந்து வந்தது. அதன் பின்னர் தொடர்ந்து,சரவணன், நிர்வாகத்திடம், கூலியை கேட்டு வந்துள்ளார். ஆனால் ஆலை நிர்வாகம், சரவணனுக்கு கூலி வழங்காமல் அலைகழித்தது. இதனிடையில், சரவணனுக்க,கூலி வழங்குவதற்கான ரசீது வந்தது. அதனை எடுத்து கொண்டு கேட்ட போது, ஆலையின் அதிகாரியான ராஜா என்பவர், பணம் தராமல் அலைய விட்டார். பணம் பெறாததால், தன்னுடன் வந்த கூலி தொழிலாளர்களுக்கு பதில் கூற முடியாது, அவர்கள் அனைவரும் ஏழைகளாக இருப்பதால், பணம் வரவில்லை என்றால், அவர்களின் நிலை கேள்வி குறியாகும் என்று மன வெறுத்து போன, சரவணன், கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு சென்ற புகார் அளித்தார்.
பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் காவல் நிலைய வாசலில் விஷமருந்தினார். இதனையறிந்த அருகிலுள்ளவர்கள், சரவணனை, உடனடியாக வாகனம் மூலம் அழைத்து வந்து, தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைகாக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து சரவணன் கூறுகையில், குருங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த 8 மாதமாக ரூ.1,38,863 தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். நானும் கூலி கேட்டு பல முறை அலைந்து பார்த்தும், பணம் வழங்குவதாக இல்லை. இதனால் கடன்காரர்களும், என்னுடன் வந்தவர்களும் கூலி கேட்டு தொந்தரவு செய்தார்கள்.
கூலி வழங்குவதற்கான ரசீது வந்தும், ஆலை நிர்வாக அதிகாரிகள், கூலி பணம் வழங்காததால், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தேன். இதனால் மன வெறுத்த நிலையில் கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து விட்டு, தற்கொலை செய்து கொள்வதற்காக விஷமருந்தினேன். இதனையறிந்த பணியிலிருந்த போலீசார், 108 வாகனம் மூலம் தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக்கல்லுாரிக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்துள்ளனர். எனவே, குருங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாகம் உடனடியாக கூலி பாக்கி தொகையை வழங்க வேண்டும் என்றார்.