பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களை நோக்கி வருகிறார்கள் - முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
பழனிசாமி எங்கள் பக்கம் சேராமல் போகட்டும், ஆனால், கோடான கோடி தொண்டர்கள் எங்களுடன் சேர்வதற்கு தயாராக உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை பழனிசாமி ஏற்கவில்லை. அவர் கொடுத்த அறிக்கையை மக்களும், தொண்டர்களும் ஏற்கவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் தற்போது எங்களை நோக்கி வருகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் அ.தி.மு.க., தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு நேற்று வந்த ஓ.பி.எஸ்., ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது;
இருபெரும் தலைவர்கள் கட்டி காத்த இந்த இயக்கத்தை, சுயலாபத்திற்காக, ஒருவர் தனக்கு கீழே இந்த இயக்கம் இருக்க வேண்டும் என நினைக்கிறார் என்பது அவருடைய பேட்டி மூலம் மக்களுக்கு தெளிவாக தெரிய வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி செய்த சூழ்ச்சிகள் மற்றும் நயவஞ்கங்கள் அனைத்தையும் மறந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் அதை பழனிசாமி ஏற்கவில்லை. இந்நிலையில், பழனிசாமி கொடுத்த அறிக்கையை மக்களும், தொண்டர்களும் ஏற்கவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் தற்போது எங்களை நோக்கி வருகிறார்கள். இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள், தற்போது பிரிந்து சென்றவர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வரக்கூடாது, இவர்கள் வரக்கூடாது என்றில்லை, குறிப்பாக சசிகலா, தினகரன் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பழனிசாமி தரப்பினர் மேல்முறையீட்டுக்கு சென்று உள்ளார்கள், அதனை நாங்கள் சந்திப்போம். எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ தற்போது இல்லை. அ.தி.மு.க.,விற்கு கூட்டு தலைமை தான் வேண்டும். தீர்ப்புக்கு பிறகு பழனிசாமியின் முகம் கொடூரமாக இருந்தது. அதே வேளையில் பன்னீர்செல்வத்தின் முகம் பொன் சிரிப்போடு இருந்தது. இதில் இருந்து அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும். உள்ளத்தில் இருப்பது தான் முகத்தில் தெரியும்.
பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு எந்தெந்த ஆவணங்கள் திருடு போயுள்ளது என்ற பட்டியடில் அவர்கள் தர வேண்டும். அ.தி.மு.க.,உட்கட்சி விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கட்சியில் இணைந்த போது, பழனிசாமி பேசியதை அவர் மறந்து விட்டார். நேரம் வரும்போது அது குறித்து கூறுகிறேன்.
பழனிசாமி எங்கள் பக்கம் சேராமல் போகட்டும், ஆனால், கோடான கோடி தொண்டர்கள் எங்களுடன் சேர்வதற்கு தயராக உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ‘ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து ஓபன்னீர்செல்வம் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அதிமுகவில் இருக்கும் ஒன்றரை கோடி தொண்டா்களுடைய மனதிலும், தமிழ் மக்கள் மனதிலும் இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் எண்ணமாக உள்ளது. அதனால், அனைத்துக் கசப்புகளையும் யாரும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கழகத்தின் ஒற்றுமையையே பிரதான கொள்கையாகக் கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா மறைந்த பிறகு நான்கரை ஆண்டு காலம் அன்புச் சகோதரா் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதும், அவரோடு முழு ஒத்துழைப்போடு அனைவரும் பயணித்து இருக்கிறோம்.
என்னுடைய தா்ம யுத்தத்துக்குப் பிறகு அதிமுக கூட்டுத் தலைமையாகச் செயல்படும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் உருவாக்கப்பட்டு, நானும் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவின் சட்டவிதிகளின்படி பணிகளை நிறைவாக ஆற்றினோம். அந்த ஒற்றுமை மீண்டும் வரவேண்டும் என்பது தான் எங்களின் தலையாய எண்ணம் என்றாா். இதற்குதான் பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.