மயிலாடுதுறையில் அனைவரையும் கவர்ந்த அரசு பள்ளி மாணவியின் அசத்தல் பேச்சு
மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழா சிறப்பு புகைப்பட கண்காட்சியில் துவக்க விழா அரசு பள்ளி மாணவியின் பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா சிறப்பு புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் இப்புகைப்படக் கண்காட்சியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திறந்து வைத்தார். இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளும் தமிழ்நாடு குறித்த வரைபடமும் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை ஏராளமான மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.
முன்னதாக மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு பேச்சுபோட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பேசி காண்பித்தனர். இதில் 2ம் இடம் பிடித்த கேசிங்கன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி நிதிஜாவின் பேச்சு அனைவரையும் உற்சாகமடைய செய்தது.
சாமானியர்கள், பாமரன், நடுத்தரவ வர்க்கம், ஒடுக்கப்பட்டவர்கள், தமிழின் பெருமை, தமிழர்களின் பெருமையை பற்றி எழுதியது கலைஞரின் எழுதுகோல்தான் என்றும் ராஜகுமாரி, பராசக்தி படத்தில் கலைஞர் எழுதிய வசனங்களை கோடிட்டு காட்டி பராசக்தியில் சிவாஜிகணேசன் பேசிய வசனத்தை வார்த்தை மாராமல் உயிரோட்டமாக அசத்தலாக பேசி பல படங்களில் வசனம் எழுதி திரைத்துரையை புரட்டி போட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றும் கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படங்களின் பெயர்களை பட்டியலிட்டு அசத்தலாக பேசிய மாணவியை அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர்.
மூச்சு முட்ட ஆவேசமாக கருத்துரையுடன் பேசிய மாணவிக்கு தண்ணீர் கொடுத்து ஆசிரியர்கள் ஆசுவாசப்படுத்தினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா, பூம்புகார் சட்’டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.